பாஜக நிர்வாகிகள் பட்டியலை அறிவிப்பதில் இழுபறி

அண்ணாமலைக்கு குடைச்சல் கொடுப்பவர்கள் யார்?
பாஜக நிர்வாகிகள் பட்டியலை அறிவிப்பதில் இழுபறி

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் நியமனத்தில் மூத்த தலைவர்களுக்கும், மாநில தலைவர் அண்ணாமலைக்கும் மோதல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பட்டியல் அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

பாஜகவில் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். தமிழகத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கான நிர்வாகிகளை நியமிப்பதற்கான ஆலோசனை பல கட்டமாக நடைபெற்றது. இதில் ஏற்கனவே மூத்த நிர்வாகிகளாக உள்ள பலர், தங்களது ஆதரவாளர்களை மாவட்ட பொறுப்புகளுக்கு கொண்டு வர முயற்சி செய்தனர்.

அதே போல அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள், பாஜகவின் மாநில தலைமைப் பதவிகளைக் குறிவைத்து வேலை செய்து வருகின்றனர். இது மூத்த பாஜக நிர்வாகிகளிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக கடந்த 2011 ஜூலை 8-ம் தேதி அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அதிரடியாகப் பேசுவோடு மட்டுமின்றி கட்சியில் அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். தமிழகத்தில் பாஜகவிற்கு எதிர்க்கட்சித் தோற்றத்தை உருவாக்கத்திற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்குவதோடு மட்டுமின்றி போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். அத்துடன் பாஜகவில் ஒழுங்காக கட்சிப்பணியாற்றாதவர்களைக் கட்டம் கட்டி தூக்கி வருகிறார்.

தமிழகம் முழுவதும் இல்லம் செல்வோம், உள்ளம் வெல்லுவோம் திட்டத்தை அமல்படுத்தாத நிர்வாகிகள் மீது அவர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சரிவர பணியாற்றாத 8 மாவட்டத் தலைவர்களைப் பதவியில் இருந்து நீக்கினார். மேலும் பலர் நீக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார். இது கட்சி மத்தியினரிடையே அப்போதே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கட்சியின் மத்திய தலைமைக்கும் புகார்களை சிலர் தட்டி விட்டனர்.

இந்நிலையில் வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை மாநில தலைமைக்கு கட்சியின் மத்திய தலைமை வலியுறுத்தியுள்ளது.

இந்த முடிவை வடிவம் பெற வைக்கும் வகையில் மாநில நிர்வாகிகள் அமைய வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை விரும்புகிறார். ஆனால், அதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர்களாக இருந்தவர்கள், மூத்த நிர்வாகிகள் பலர் முட்டுக்கட்டைப் போட்டு வருகின்றனர். அடுத்த கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கி அழகுபார்க்கும் அண்ணாமலை, நீண்ட காலமாக கட்சியில் பணியாற்றியவர்களைப் புறக்கணிக்கிறார் என்ற குமுறல்களும் எழுந்துள்ளது. யார், யாருக்கு என்ன பொறுப்பு என்று தெரிந்து விட்டால், பலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பேராசிரியர் சீனிவாசன்.
பேராசிரியர் சீனிவாசன்.

இதுகுறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசனிடம் பேசினோம்." மாநிலத்தலைவர் நிர்வாகிகளின் பட்டியலை இறுதி செய்து விட்டார். இதனால் நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்படவில்லை. மீடியாவில் தான் அப்படி செய்தி போடுகிறார்கள்" என்றார்.

தனக்கு மாநிலத் துணைத்தலைவர் பதவி வேண்டியதில்லை என்று நயினார் நாகேந்திரன் ஒரு ஊடகத்திடம் தெரிவித்துள்ளாரே என்று அவரிடம் கேட்டதற்கு, " அவர் பாஜக சட்டப்பேரவை தலைவராக உள்ளார். பணிச்சுமை இருப்பதன் காரணமாக அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். முழுமையாக நிர்வாகிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டது. அதை அறிவிக்கிற அதிகாரம் மாநில தலைவருக்கு உள்ளது. அவர் விரைவில் அறிவிப்பார் என்று நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.