எதிர்க்கட்சிகள் மீது பாஜக எடுத்து வீசும் பிரம்மாஸ்திரங்கள்; பலன் கொடுக்குமா பஸ்பமாகுமா?

மோடி அண்ணாமலை
மோடி அண்ணாமலை

இந்த தேர்தலில் 400 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்று மேடைதோறும் அறுதியிட்டுப் பேசி வருகிறார் பிரதமர் மோடி. ஆனாலும் கூட பாஜகவுக்கு உள்ளூர தங்கள் வெற்றியின் மீது இன்னமும் சந்தேகம் உள்ளது. எனவே, வாக்குப்பதிவு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு பிரம்மாஸ்திரங்களையும் ஏவத் தொடங்கியிருக்கிறது பாஜக.

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதிப்பங்கீடு எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக களமாடி வருகின்றன. ஏப்ரல் 19-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கவிருக்கிறது. தனிப்பெரும் கட்சியாக பார்க்கும்போது பாஜக பெரிய கட்சியாக இருப்பினும், கூட்டணி அடிப்படையில் பார்க்கும்போது பாஜகவால் இந்தமுறை பலமான அணியை கட்டமைக்க முடியவில்லை.

அமித் ஷா, மோடி, ஜே.பி.நட்டா
அமித் ஷா, மோடி, ஜே.பி.நட்டா

தமிழ்நாட்டில் கூட்டணியில் இருந்த அதிமுக, ஜார்க்கண்டில் ஆட்சியில் பங்கேற்றிருந்த ஜேஜேபி, பஞ்சாபில் அகாலிதளம் போன்ற கட்சிகள் பாஜக கூட்டணியிலிருந்து விலகிவிட்டன. ஒடிசாவில் கடைசிநேரத்தில் பிஜு ஜனதா தளமும் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆந்திராவில் தெலுங்குதேசம், கர்நாடகாவில் மஜத, பீகாரில் நிதிஷ்குமார், மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் இவர்கள்தான் இப்போது பாஜகவோடு கூட்டணியில் உள்ள சொல்லிக்கொள்ளும்படியான கட்சிகள். ஆனால் இந்தியா கூட்டணியில், 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. ஆனால், பலம்வாய்ந்த கூட்டணியாக இருந்தாலும் அதிகபட்சம் 170 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி வெல்லாது என்கின்றன கருத்துக்கணிப்புகள்.

ஆனாலும் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி தங்கள் கூட்டணி வெற்றிபெறும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள் இந்தியா கூட்டணியினர். இதற்கு உதவிசெய்யும் வகையில் தேர்தல் பத்திர விவகாரம், ஆட்சிக்கு எதிரான மனநிலை, உள்ளூர் பிரச்சினைகள் என பாஜகவை பதம்பார்க்கும் விஷயங்களும் அதிகமாகியே வருகின்றன. இதெல்லாம் தான் பாஜக தலைவர்களின் ஆழ்மனதில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் வெளிப்பாடாகவே சிட்டிங் எம்பி-க்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மீண்டும் சீட் கொடுக்காமல் மறுத்திருக்கிறது பாஜக. அதோடு மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களிலும் பிரபலமாக இருக்கக்கூடிய எம்எல்ஏ-க்கள், மாநில அமைச்சர்கள், ராஜ்யசபா எம்பி-க்கள் உள்ளிட்டவர்களை களத்தில் இறக்கியுள்ளார்கள். ஆளுநர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு தமிழிசை சவுந்தரராஜன் களத்துக்கு வந்திருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

எப்படியாவது மூன்றாவது முறையும் பிரதமராக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் மோடி. இந்த முறை ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு நிற்கிறது பாஜக. ஏனென்றால், வரப்போகும் இந்த 5 ஆண்டுகளில் தான் பாஜக தனது அத்தனை செயல்திட்டங்களையும் நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது. எனவே, சிறுதுரும்பும் தங்கள் வெற்றிக்கு பாதகம் செய்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

ஒரு ஆண்டுக்கு முன்னரே தொகுதிவாரியாக தேர்தலை எதிர்கொள்ளும் வியூகம், வேட்பாளர்கள் லிஸ்ட் போன்றவற்றை தயார் செய்தது பாஜக. அடுத்தது தொகுதிவாரியாக எதிரணியில் இருக்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை தூக்கும் வேலைகள் நடைபெற்றன. கடைசியாக, கடந்த ஒரு மாதத்தில் நாடு முழுவதும் உள்ள முக்கியமான எதிர்க்கட்சி தலைவர்கள் சாரை சாரையாக பாஜகவில் இணைந்தார்கள்.

அடுத்ததாக மாநிலம் வாரியாக தங்களுக்கு சவாலாக உள்ளோர்களுக்கு பொறி வைத்தார்கள். அதில் முதலில் சிக்கியவர் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன். தொடர்ந்து தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா சிக்கினார். அடுத்ததாக தேசிய அளவில் மிகமுக்கியமான தலைவரான அர்விந்த் கேஜ்ரிவாலையே கைது செய்துள்ளது அமலாக்கத்துறை. உலக அளவில் அதிர்வுகளை உருவாக்கியுள்ள கேஜ்ரிவாலின் கைது டெல்லி, பஞ்சாப், குஜராத், கோவா, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு சரிவை உண்டாக்குமென நம்புகிறது பாஜக.

இந்தியா கூட்டணி தலைவர்கள்
இந்தியா கூட்டணி தலைவர்கள்

காங்கிரஸ் கட்சிக்கும் பிரத்யேக ஸ்கெட்ச் போடப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை முடக்கியது வருமான வரித்துறை. அதுமட்டுமின்றி சுமார் 3,500 கோடி ரூபாய் வருமான வரி பாக்கியை செலுத்தச்சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி நெருக்கடி கொடுத்தது வருமான வரித்துறை. இந்தியா கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதேபோல் நெருக்கடி கொடுத்தது வருமான வரித்துறை. இப்படி ஓவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் என தனித்தனியாக ‘பிரம்மாஸ்திரம்’ ஏவப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எப்படியும் இந்த முறை வெற்றிக்கணக்கை தொடங்க ஆர்வமாக உள்ளது பாஜக. அதன்படி ஓரளவு பலமான கூட்டணியை அமைத்த பாஜக, திமுகவை எல்லா பக்கமும் கடுமையாக தாக்கி வருகிறது. போதைப்பொருள் விவகாரம், ஊழல், குடும்ப அரசியல், சொத்துப்பட்டியல் வெளியீடு என ஒவ்வொரு தாக்குதலாக தொடுத்தப்பார்த்த பாஜக, இப்போது பிரம்மாஸ்திரமாக கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

1974 முதல் தமிழ்நாட்டில் புகைந்துவரும் கச்சத்தீவு பிரச்சினைக்கு தற்போது ‘ஆர்டிஐ’ தகவல்கள் மூலமாக தூபம் போட்டிருக்கிறார் அண்ணாமலை. காங்கிரஸ் முன்னாள் பிரதமர்களான நேருவும், இந்திரா காந்தியும் கச்சத்தீவை பொருட்டாக நினைக்கவில்லை எனவும், நாட்டின் நலனை புறந்தள்ளி இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்தார்கள் என்றும் பிரதமர் மோடியே விமர்சித்துள்ளார். மேலும், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் திமுகவும் கூட்டு என விமர்சித்து வருகிறார் அண்ணாமலை.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கச்சத்தீவு விவகாரம் தமிழகத்தில் ஓரளவு சலசலப்பை உருவாக்கியுள்ளது உண்மைதான். இது பொதுவான வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸ், திமுக பற்றிய எதிர்மறை எண்ணங்களை தோற்றுவித்தாலும், கடந்த 10 ஆண்டுகள் கச்சத்தீவை மீட்க பாஜக என்னதான் செய்தது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

தேர்தல் நெருக்கத்தில் பிரச்சினைகளை திசை திருப்பி எதிர்க் கட்சிகளுக்கு எதிராக பாஜக எடுத்து வீசும் பிரம்மாஸ்திரங்கள் அக்கட்சிக்கு பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in