
மு.க.ஸ்டாலின் சிரித்தபடி இருக்கும் திமுக போஸ்டரில் பாஜக மாவட்டப் பொருளாளர் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதை திமுக, பாஜக தொண்டர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துவருகின்றனர்.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை திமுக, அதிமுக இடையே இருந்த அரசியல் சக்கரம், சமீபகாலமாக திமுக, பாஜக என மையம் கொண்டுள்ளது. இப்படியான சூழலில் நாகர்கோவில் மாநகர மேயரை வாழ்த்தி திமுக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் என்பவர் ஒட்டியுள்ள போஸ்டரில் பாஜகவின் மாவட்டப் பொருளாளர் முத்துராமன் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியின் மேயராக இருப்பவர் மகேஷ். இவர் திமுகவின் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் உள்ளார். நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் நான்கு மண்டலங்கள் உள்ளன. அதில் ஒரு மண்டலத்தில் பாஜகவின் மாவட்டப் பொருளாளர் முத்துராமன் தலைவராக உள்ளார். இவர் உள்பட நான்கு மண்டலத்தலைவர்களையும் வாழ்த்தி திமுகவினரால் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில், “வணக்கத்திற்குரிய மேயர் மகேஷ் தலைமையில் மண்டலத் தலைவர்களாக பொறுப்பேற்றிருக்கும் சகோதர, சகோதரிகள் ’’நம்ம நாகர்கோவில்’’ என்ற ஒற்றுமை உணர்வுடன் செயலாற்றி வெற்றி காண வாழ்த்துகிறேன்’’ என வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மு.க.ஸ்டாலின் முகம் மலர்ந்திருக்கும் போஸ்டரில் பாஜக மாவட்டப் பொருளாளர் முத்துராமனைப் பார்த்த பாஜக தொண்டர்கள் ஒருகனம் குழம்பி போயினர். போஸ்டரில் இருக்கும் நான்கு மண்டலத் தலைவர்களில் இருவர் திமுகவினர். ஒருவர் காங்கிரஸ் கட்சி. முத்துராமன் மட்டுமே பாஜக. நான்கு மண்டலத் தலைவர்களும் ஒருசேர சேர்ந்து மாநகர வளர்ச்சிக்குத் துணை நில்லுங்கள் என போஸ்டர் ஒட்டுவது மக்களுக்கான வளர்ச்சிப் பாதையைத்தான் குறிக்கும். கட்சி பாகுபாடுகளைக் களைந்து மக்களுக்காக மேயர் மகேஷ் தலைமையில் ஒற்றுமையுடன் செயல்படத்தானே வாழ்த்தப்பட்டுள்ளது. இதில் அரசியல் எங்கேயிருந்து வந்தது எனக் கேட்கின்றனர் திமுகவினர்.