அமைச்சர் பிடிஆர் பண்பாடு இல்லாமல் நடந்து கொண்டார் - குற்றம் சாட்டும் பாஜக

அஞ்சலி செலுத்தும் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்
அஞ்சலி செலுத்தும் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை விமான நிலையத்தில் ராணுவவீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பண்பாடு இல்லாமல் நடந்து கொண்டார் என மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சரின் காரை  மறிக்கும் பாஜகவினர்
அமைச்சரின் காரை மறிக்கும் பாஜகவினர்

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 6 பேரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவவீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பாஜகவினரை பார்த்து, உங்களுக்கு என்ன தகுதியுள்ளது. இங்கு வந்துள்ளீர்கள் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேட்டார். இவர்களை (பாஜகவினரை) ஏன் உள்ளே விட்டீர்கள் என அங்கிருந்த பொதுமக்களை பார்த்து அமைச்சர் கேட்டார்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லி பிரிவினைவாதத்தை தூண்டும் அமைச்சருக்கு பாஜகவினரை கேள்வி கேட்க எந்த தகுதியும் கிடையாது.

ராணுவவீரர் லெட்சுமணனுக்கு மருத்துவர் என்ற முறையில் நான் ஏற்கெனவே சிகிச்சை அளித்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கு என்னை நன்றாக தெரியும். அந்த வகையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையம் சென்றேன்.

அமைச்சர் பிடிஆர் திமுகவால் வெற்றி பெற்றவர். தனிப்பட்ட செல்வாக்கால் வெற்றிபெறவில்லை. அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் மத்திய தொகுதியில் போட்டியிடட்டும். நானும் அங்கு போட்டியிடுகிறேன். யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

அமைச்சரின் செயல்பாட்டை பார்த்து திமுகவினரே கொதித்துப் போய் உள்ளனர். அமைச்சர் பண்பாடு இல்லாமல் நடந்து கொண்டார். அவரை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் நீக்க வேண்டும்.

பாஜகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருவதால் அமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். அதிமுகவினரை எதுவும் சொல்லாத அமைச்சர், பாஜகவினரிடம் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டது கண்டிக்கதக்கது.

அமைச்சர் பிடிஆர் எங்கு சென்றாலும் பாஜகவினர் எதிர்ப்பை பதிவு செய்வார்கள். அமைச்சருக்கு எதிராக அறவழியில் போராடுவோம். வழக்கை சட்டப்படி சந்திப்போம்" என்று சரவணன் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in