
தமிழ்நாட்டில் பாஜகவை சாம்பலாக்கி அஸ்தியை கரைத்து விட்டதாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி ஒரு நகைச்சுவை வசனத்தை ட்வீட் செய்துள்ளார்.
கடந்த 2021 தமிழக சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வென்றது. இதனால், தமிழகத்தில் வளர்ந்து விட்டதாக பாஜக மார்தட்டி வருகிறது. மேலும் கடந்த 20 மாத கால திமுக ஆட்சியை தினமும் விமர்சனம் செய்து சட்டமன்ற எதிர்க்கட்சியான அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழக அரசியல் ஓட்டப் பந்தயத்தில் முந்திவிட முனைப்பு காட்டி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காசி முதல் ராமேஸ்வரம் எனும் தேசிய நீரோட்டத்தில் வலம் வர பாஜக திட்டமிட்டுள்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில் பிரதமர் மோடி வாராணசி, ராமநாதபுரம் ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடப் போவதாக செய்தியை கசியவிட்டுள்ளனர்.
மேலும் காசி சங்கமம் நடத்தி தமிழ் பற்றாளர்கள் என அடையாளம் காட்டியுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டை, தமிழகம் என அழைக்கலாம் என ஆளுநர் ரவியின் சர்ச்சைப் பேச்சு, அரசு தயாரித்த அறிக்கையை சட்டமன்ற கூட்டத்தொடரில் வாசிக்காதது, முதல்வர் ஸ்டாலின் கண்டன உரையின் போது ஆளுநர் வெளியேறியது உள்ளிட்ட சம்பவங்களுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், சினிமா பிரபலங்களும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, பாஜகவை அஸ்தியாக்கி கரைத்து விட்டதாக ஒரு நகைச்சுவை வசன போட்டோவை திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், `இப்பத்தான் காசி தமிழ் சங்கமம் என்று எதையோ பேசி, தமிழ்நாட்டில் ஏதாவது செய்து விடலாம் என பார்த்து, தமிழ்நாடு என்னும் நெருப்பில் கையை வைத்து மிச்சமிருந்த பாஜகவை சாம்பலாக்கி அஸ்தியை தமிழ்நாட்டிலே கரைத்து விட்டார்கள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.