மோடிக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம்: பெண் வழக்கறிஞர்களைச் சூழ்ந்து வம்பிழுத்த பாஜகவினர்!

நந்தினி, நிரஞ்சனா
நந்தினி, நிரஞ்சனாமோடிக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம்: பெண் வழக்கறிஞர்களைச் சூழ்ந்து வம்பிழுத்த பாஜகவினர்!

நாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களைக் கொடுத்து  பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும், வழக்கறிஞர்களுமான  நந்தினி, அவரது தங்கை நிரஞ்சனா ஆகியோரிடம் பாஜகவினர்  சூழ்ந்து கொண்டு தகராறு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையைச் சேர்ந்த நந்தினியும், அவரது தங்கை நிரஞ்சனாவும் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் விமர்சித்து மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில்  நாகை பழைய பேருந்து நிலையம்  பகுதியில் மத்திய அரசையும், பிரதமா் நரேந்திர மோடியையும், மது விலக்கை அமல்படுத்தாத தமிழக அரசையும் கண்டித்து நேற்று மாலை  துண்டு பிரசுரங்களை  பொதுமக்களுக்கு அவர்கள் விநியோகம் செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி  பாஜகவினா் அங்கு திரண்டனர். நந்தினி மற்றும் நிரஞ்சனாவை சூழ்ந்து கொண்டு இங்கு  துண்டுப் பிரசுரங்களை வழங்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தன்னுடைய ஆடையை பிடித்து பாஜகவினர் இழுத்து வம்பு இழுத்ததாக நந்தினி தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. 

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸாா் பாஜகவினரை அப்புறப்படுத்தி  இவர்கள்  இருவரையும் நாகை நகரக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  ஆனால் அங்கும் வந்த பாஜகவினர், பிரதமா் மோடிக்கு எதிராக அவதூறு பரப்பிவரும் நந்தினி, நிரஞ்சனாவை கைது செய்ய வேண்டும் என போலீஸாரிடம் வலியுறுத்தினர்.

இதனால் காவல் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  சுமார் 3 மணி நேரம் நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். அதன்பின்னர் ஒருவழியாக பாஜகவினரை சமாதானப்படுத்தி அனுப்பிய போலீஸார் அதன்பிறகே இருவரையும் விடுவித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in