கட்டம் கட்டி சிவசேனாவை வீழ்த்தியது பாஜக: மகாராஷ்ட்டிர ராஜ்யசபா தேர்தலில் பரபரப்பு!

கட்டம் கட்டி சிவசேனாவை வீழ்த்தியது பாஜக: மகாராஷ்ட்டிர ராஜ்யசபா தேர்தலில் பரபரப்பு!

மகாராஷ்டிரா அரசியலில் ஆளும் சிவசேனா கட்சிக்கு பெரும் பின்னடைவாக, நேற்று நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் சிவசேனா கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து பாஜக வெற்றிபெற்றுள்ளது.

மகாராஷ்ட்டிராவில் மொத்தமுள்ள 6 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அனில் போண்டே மற்றும் தனஞ்சய் மதீக் என பாஜக சார்பில் போட்டியிட்ட 3 பேரும் வெற்றி பெற்றனர்.

இந்த தேர்தலில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மற்றும் சஞ்சய் பவார் ஆகிய இரண்டு வேட்பாளர்களை நிறுத்தியது அக்கட்சி, இதில் சஞ்சய் ராவத் வெற்றிபெற்றார், மற்றொரு வேட்பாளர் சஞ்சய் பவார் தோல்வியடைந்துள்ளார். மகா விகாஸ் அகாடி கூட்டணியின் வேட்பாளர்களான காங்கிரஸின் வேட்பாளர் இம்ரான் பிரதாப்காதி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரபுல் படேல் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தமுள்ள 6 இடங்களுக்கு 7 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால் மகாராஷ்ட்டிர அரசியலில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பு நிலவியது. நேற்று நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் ஆறாவது இடத்திற்கான போட்டியில் சிவசேனாவின் சஞ்சய் பவார் மற்றும் பாஜகவின் தனஞ்சய் மதீக் இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், மதீக் 41 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பவாருக்கு 33 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

பாஜக வேட்பாளர்களான பியூஸ் கோயல் மற்றும் அனில் போண்டே ஆகியோர் அதிகபட்சமாக தலா 48 வாக்குகள் பெற்றனர். என்சிபியின் பிரபுல் படேல் 43 வாக்குகளையும், காங்கிரஸின் இம்ரான் பிரதாப்காடி 44 வாக்குகளையும், சிவசேனாவின் சஞ்சய் ராவத் 41 வாக்குகளையும் பெற்றனர்.

மாநில சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 288 உறுப்பினர்களில் 285 பேர் வெள்ளிக்கிழமை மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களித்தனர். நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவடைந்த வாக்குப்பதிவில் ஐந்து உறுப்பினர்கள் நடத்தை விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டி மகா விகாஸ் அகாடி மற்றும் பாஜக ஆகியவை ஆட்சேபனை தெரிவித்தன. இந்த விவகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு, பதிவு செய்யப்பட்ட வீடியோக்களைப் பார்த்த பிறகு, ஒரு உறுப்பினரின் வாக்கு செல்லாததாகக் கருதப்படும் என்று அறிவித்தது, எனவே, ஒன்பது மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தேர்தல் முடிவுகளால் மகிழ்ச்சியடைந்த பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், “பாஜக வேட்பாளர்கள் பெற்ற உபரி வாக்குகள், மாநிலத்தில் 170 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறும் மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தின் உண்மைநிலையை அம்பலப்படுத்தியுள்ளது. சிவசேனா அரசில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை இது காட்டுகிறது" என தெரிவித்தார்

மகாராஷ்ட்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ள சிவசேனாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்வியானது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in