ஓபிஎஸ்- ஈபிஎஸ்ஸுடன் அடுத்தடுத்து பாஜக மேலிட பொறுப்பாளர் திடீர் சந்திப்பு!- என்ன காரணம்?

ஓபிஎஸ்- ஈபிஎஸ்ஸுடன் அடுத்தடுத்து பாஜக மேலிட பொறுப்பாளர் திடீர் சந்திப்பு!- என்ன காரணம்?

களேபரத்துக்கு மத்தியில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரை பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வானகரத்தில் இன்று காலை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அடுத்தடுத்து பங்கேற்றனர். ஈபிஎஸ் வரும்போது ஆரவாரம் செய்த அதிமுகவினர், ஓபிஎஸ் வரும்போது வெளியே போ என்று கோஷமிட்டனர். இதன் பின்னர் நடந்த கூட்டத்தில், சி.வி.சண்முகம் திடீரென எழுந்து, 23 பொதுக்குழு தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக கூறினார். இதை கே.பி.முனுசாமியும் ஆமோதித்தார். இந்த பரபரப்புக்கு மத்தியில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.பிரபாகர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். அப்போது, ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவினரால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த களேபரத்துக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், சென்னை கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்திற்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் திடீரென வந்தனர். முதலில் ஈபிஎஸ்ஸை அவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். இதன் பின்னர் ஓபிஎஸ்ஸை சி.டி.ரவி, அண்ணாமலை ஆகியோர் சந்தித்துப் பேசினர். ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே பிரச்சினை வெடித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு கேட்டு இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுக்கு 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இந்த சந்திப்பு குறித்து ஜெயக்குமார் கூறுகையில், "அதிமுக விவகாரம் குறித்து பாஜக பேசவில்லை. நாங்களும் விரும்பவில்லை. அவர்களும் விரும்பவில்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in