பாஜகவினர் புடைசூழ பதவியேற்க வந்த காங்கிரஸ் கவுன்சிலர்!

குமரியில் திமுகவினர் கடும் எதிர்ப்பு
பாஜகவினர் புடைசூழ
பதவியேற்க வந்த காங்கிரஸ் கவுன்சிலர்!

குமரி மாவட்டம், தென்தாமரைகுளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் திமுக 3 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். அதே போல் பாஜக 4 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதில் திமுக மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் கூட்டணி அமைத்ததால் அவர்களின் பலம் 7 ஆனது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் இணையவில்லை. பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து பலத்தை 7 ஆக உயர்த்தின. பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற இன்னும் ஒரு கவுன்சிலர் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் கவுன்சிலரிடம் இரு தரப்பினரும் பேசி வந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர் மல்லிகா ஒரு வாரத்திற்கு முன்பு தலைமறைவானார். இதனைக் கண்டித்து அவர் வீட்டு முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் பதவியேற்பு விழாவிற்கு அவர் வருவாரா? யாருடன் வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனால் பேரூராட்சி அலுவலகம் முன்பு இன்று ஏராளமான திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் திரண்டிருந்தனர்.

அப்போது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜன் உள்பட நூற்றுக்கணக்கான பாஜகவினர் புடைசூழ காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா பதவியேற்க வந்தார். அவருடன் 4 பாஜக கவுன்சிலர்கள், 3 அதிமுக கவுன்சிலர்கள் வந்திருந்தனர்.

இதனால் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்ட திமுக, பாஜகவினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மல்லிகாவைத் தாக்க முயன்றனர். கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா, இருதரப்பினையும் விலக்கி விட்டனர். பின்னர் வெற்றி கவுன்சிலர்கள் மட்டும் பேரூராட்சி அலுவலகத்திற்குள் பதவியேற்க போலீஸார் அனுப்பி வைத்தனர். எலியும், பூனையுமாக உள்ள காங்கிரஸ், பாஜகவினர் குமரி மாவட்டத்தில் ஒன்று சேர்ந்து இருப்பது திமுகவினரிடையே புகைச்சலை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.