ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 7  மாத ஆண் குழந்தை: பாஜக பெண் கவுன்சிலர் கைது

ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தை: பாஜக பெண் கவுன்சிலர் கைது

உத்தரப்பிரதேசத்தில் ரயில் நிலையத்தில் 7 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் பாஜக நகராட்சி கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் உள்பட பலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலைய மேடையில், ஆக. 24-ம் தேதி ஒரு தம்பதி தங்கள் 7 மாத ஆண் குழந்தையுடன் இரவு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மர்மநபா் ஒருவா், குழந்தையை அங்கிருந்து தூக்கிச் சென்றார். சிறிது நேரத்துக்குப் பிறகு எழுந்து பார்த்த பெற்றோர், குழந்தை காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனா். அக்கம் பக்கத்தில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனா். இதன் பேரில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அடையாளம் தெரியாத நபா் குழந்தையை கடத்திச் செல்வது தெளிவாக பதிவாகியிருந்தது.

அந்த காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அந்த குழந்தை மதுரா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் பாஜக பிரமுகர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தையை பாஜக நகராட்சி கவுன்சிலர் வினிதா அகர்வாலும், அவரது கணவர் கிருஷ்ணா முராரி அகர்வாலும் இரண்டு மருத்துவர்களிடம் இருந்து ரூ 1.8 லட்சத்துக்கு வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது.

ஏற்கெனவே இந்த தம்பதிக்கு பெண் குழந்தை இருக்கும் நிலையில், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காகப் பணம் கொடுத்து வாங்கி உள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இவர்களிடம் குழந்தையை விற்ற அந்த இரண்டு மருத்துவர்களின் பின்னணியில் குழந்தை கடத்தல் கும்பல் செயல்பட்டதையும் மதுரா போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 8 பேர் கொண்ட கடத்தல் கும்பலை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். பாஜக கவுன்சிலர் வினிதா அகர்வால் மற்றும் அவரது கணவர் கிருஷ்ணா முராரி ஆகியோரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், மீட்கப்பட்ட குழந்தை உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் மதுராவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in