
முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக, பாஜக கவுன்சிலர் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சுயம்பு. இவர் தென்தாமரைகுளம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவர் 2 தினங்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுத் தொடர்பாக திமுக வழக்கறிஞர் சிவ கோடீஸ்வரன் என்பவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரளித்தார். அந்த புகாரில், “இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பேரூராட்சி பாஜக கவுன்சிலர் சுபாஷ் சுயம்பு ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.
எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்திருந்தார். அவரது புகாரை விசாரித்த காவல்துறையினர், பின்னர் சுபாஷ் சுயம்புவை கைது செய்தனர்.