வாரிச் சுருட்டிய ஆம் ஆத்மி அலை: கட்சி தாவும் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்

வாரிச் சுருட்டிய ஆம் ஆத்மி அலை: கட்சி தாவும் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்

டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில், டெல்லிக்கும் பஞ்சாபுக்கும் இடையில் உள்ள ஹரியாணாவிலும் அக்கட்சியின் அலை வீசத் தொடங்கிவிட்டது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92-ல் வென்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சி வெல்லக்கூடும் என்று முன்பே கணிக்கப்பட்டிருந்தாலும் இத்தனை பெரிய வெற்றி கிட்டும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் இந்தப் பேரலையில் சிக்கி அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து, சரண்ஜீத் சிங் சன்னி, பிரகாஷ் சிங் பாதல் என்று பஞ்சாபின் முக்கிய அரசியல் தலைவர்கள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோற்றுப்போயினர்.

இந்தச் சூழலில், இனி ஆம் ஆத்மி கட்சியில்தான் தங்களுக்கு எதிர்காலம் என்று ஹரியாணாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருதத் தொடங்கிவிட்டார்கள்.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சுஷீல் குப்தா, என்.டி.குப்தா, கட்சியின் தேசியச் செயலாளர் பங்கஜ் குப்தா ஆகியோரின் முன்னிலையில் நேற்று ஹரியாணாவைச் சேர்ந்த ஏராளமான அரசியல் கட்சியினர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். முன்னாள் சுயேச்சை எம்எல்ஏ-வான ரவீந்திர குமார், காங்கிரஸைச் சேர்ந்த ஜகத் சிங், பாஜகவைச் சேர்ந்த அசோக் கிட்டல், அமன்தீப் சிங், பிராம் சிங் குர்ஜார் உள்ளிட்ட பலர் ஆம் ஆத்மியில் ஐக்கியமாகிவிட்டார்கள்.

இவர்களில் பலர் எம்எல்ஏ-க்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்தவர்கள் என்பது ஆம் ஆத்மி கட்சியினரை அகமகிழச் செய்திருக்கிறது. பஞ்சாப் வெற்றி தந்த பரவசத்தில், அகில இந்திய அரசியலில் கால் பதிக்கும் முனைப்பில் அக்கட்சி இருக்கிறது. 2024-ல் ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தாக்கம் அந்தத் தேர்தலில் எதிரொலிக்கும் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in