'பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான்' - பாரத் ஜோடோ யாத்திரை குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கவில்லை என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் காங்கிரஸின் முயற்சியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 3-ம் தேதி டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தில் நுழையவுள்ள பாரத் ஜோடோ யாத்திரைக்கு நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்களா என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “ எங்கள் கட்சி வேறுபட்ட சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான். உங்கள் தொலைபேசியில் அழைப்பிதழ் இருந்தால், அதை எனக்கு அனுப்பவும். எங்கள் உணர்வுகள் அவர்களின் யாத்திரையுடன் உள்ளன. எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை" என தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் மிகப் பெரிய எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு யாத்திரையில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் அவர்கள் இருவரும் யாத்திரையில் இணைய வாய்ப்பில்லை என்றும், ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சியும் யாத்திரையில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியானது. சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கன்ஷ்யாம் திவாரி, “பாரத் ஜோடோ யாத்ரா யோசனையை தனது கட்சி ஆதரிக்கிறது. ஆனால் கூட்டணி பற்றிய ஊகங்களைத் தூண்ட விரும்பவில்லை”என்று கூறினார்.

காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் முக்கியமான கூட்டணிக் கட்சிகளாக இருந்து, 2017 உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இன்றைய நிலவரப்படி, யோகி ஆதித்யநாத்தின் பாஜக அரசாங்கத்திற்கு எதிராக சமாஜ்வாதி முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸுக்கு உ.பி சட்டமன்றத்தில் இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளன. 2017ல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தோல்வியை சந்தித்த பிறகு, அகிலேஷ் யாதவ் இப்போது கூட்டணி விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கிறார். ஆனால், இந்த ஆண்டு கூட்டணி இல்லாமல் சட்டமன்ற தேர்தலை சந்தித்த சமாஜ்வாடி கட்சி, பாஜகவுக்கு கடும் சவால் விடுத்து கணிசமான வெற்றியை பதிவு செய்துள்ளது. எனவே கூட்டணி இல்லாமல் தனித்து செயல்படவே அகிலேஷ் விரும்புகிறார் என்று சமாஜ்வாதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in