`திருமாவளவனின் செயல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்'- சென்னை காவல்துறையில் பாஜக புகார்

`திருமாவளவனின் செயல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்'- சென்னை காவல்துறையில் பாஜக புகார்

ஆர்.எஸ்.எஸ் பேரணியின் போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட திட்டமிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க மாநில துணை தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு அதற்குண்டான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறவுள்ள அதே நாளில் சூத்திரர்கள் மற்றும் பெண்கள் குறித்து மனு தர்மத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தொகுப்பாக்கி மனு ஸ்மிரிதி தொடர்பான 1 லட்சம் பிரதிகளை அச்சிட்டு தமிழகம் முழுவதும் வழங்க திட்டமிட்டுள்ளதாக நேற்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தொல் திருமாவளவனின் இச்செயல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக நாராயணன் திருப்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், உயர்நீதிமன்றம் மற்றும் காவல்துறை அனுமதியுடன் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பேரணியை சீர்குலைக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரின் செயல்பாடு உள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை மறந்து மக்களிடம் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அவர் எடுத்துச் செல்ல முயல்வதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ள அவர், தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in