அண்ணாமலைக்கு அடுத்த அதிர்ச்சி: பாஜக சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

பாஜக சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் ராஜினாமா கடிதம்
பாஜக சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் ராஜினாமா கடிதம்அண்ணாமலைக்கு அடுத்த அதிர்ச்சி: பாஜக சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகி உள்ளதால் கட்சி தலைமை அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக தேர்தல் களம் தற்போது அதிமுக, பாஜக மோதலாக மாறி வருகிறது. இதற்குக் காரணம் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியில் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பகிரங்க குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.

தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார், ஐ.டி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன், பாஜக அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்ற ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் உள்பட பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து ஏற்கெனவே விலகி அதிமுகவில் இணைந்தனர்.

அவர்களை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் படத்தை எரித்து தூத்துக்குடியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டணி தர்மத்தை மீறி எடப்பாடி பழனிசாமி மீறிய துரோகி என்று போஸ்டரும் வெளியிட்டனர்.

இதனால் பாஜக தலைமைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் பொங்கி எழுந்தால் பாஜகவினர் தாங்கமாட்டார்கள். எனவே, பாஜக மாநில தலைவர் அவர்களைக் கண்டித்து வைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், பாஜகவின், சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பு பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவைச் சேர்ந்தவர்கள் கூண்டோடு பாஜவில் இருந்து இன்று விலகி உள்ளனர். இதன்படி மாவட்ட தலைவர் அன்பரசு, மாவட்ட துணைத்தலைவர்கள் சரவணன் மற்றும் ஸ்ரீராம் உள்ளிட்ட 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகியதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அத்துடன் அதிமுகவில் இணைந்து நிர்மல்குமாருடன் இணைந்து செயல்படப்போவதாக அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதனால் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in