`பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது'- அமைச்சர் சேகர் பாபு

`பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும்  தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது'- அமைச்சர் சேகர் பாபு

கோயில்களில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற நிலையை களையும் வகையில் பல்வேறு கோயில்களில் வி.ஐ.பி தரிசனத்தை முழுமையாக தடை செய்வற்கான முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை  ஈடுபட்டு வருகிறது  என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த  சீராய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலை துறை ஆணையர் மற்றும் இணையானர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பணிகள் மேற்கொண்ட காலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கக்கூடிய இந்த காலத்தில்தான். திருவண்ணாமலை தீபத்திற்கு  2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.16 தற்காலிக பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறை சார்பில் 3739.40 கோடி ரூபாய் மதிப்பில் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளது. 254 கோடி ரூபாய் நிலுவை வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு எந்த நிகழ்வு நடத்தினாலும் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அதற்கான முழு பணிகளையும் நாங்கள் சிறப்பாக செய்து கொடுப்போம். இந்து சமய அறநிலையத் துறைக்கு காசி சங்கமம் குறித்த நிகழ்விற்கு அழைப்பு வரவில்லை, வந்தால் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம். கோயில்களில் விஜபி தரிசனம் என்பது இந்த ஆட்சியில் உருவாக்கியது அல்ல. நாளடைவில் விஜபி தரிசனம் முடக்கப்படும். பெரிய கோயில்களில் விஐபி தரிசனம் மற்றும் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யும் முறையை அந்தந்த கோயில்களில் வருமானத்தைப் பொறுத்து படிப்படியாக குறைத்து கொள்ளப்படும். கோயில்களில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற நிலையை களையும் வகையில் பல்வேறு கோயில்களில் வி.ஐ.பி தரிசனத்தை முழுமையாக தடை செய்வற்கான முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. பாஜக ஒரு சைத்தான், இந்த ஆட்சியில் சைத்தான்களுக்கு இடமில்லை. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  எப்படிப்பட்ட பேய்களையும் விரட்டக் கூடிய சக்தி படைத்தவர். அதனால் பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும்  தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in