100 சிட்டிங் எம்பிக்களுக்கு சீட் மறுப்பு... அதிருப்தி அலையின் மத்தியில் 400 இலக்கை எட்ட பாஜக பரிதவிப்பு

பாஜக தலைமை - மோடி மற்றும் அமித் ஷா
பாஜக தலைமை - மோடி மற்றும் அமித் ஷா

அதிருப்தி அலையை சமாளிக்க பாஜக தனது சிட்டிக் எம்பிக்களில் 100 பேருக்கு சீட் மறுத்துள்ளது. இவை உட்பட, அதிருப்தி அலையை எதிர்கொள்ள இன்னும் பல வியூகங்களை பாஜக முன்னெடுத்துள்ளது.

தொடர்ந்து 2 முறை ஆட்சியிலிருந்த சாதனையே, நடப்பு மக்களவை தேர்தலை எதிர்கொள்வதில் பாஜகவின் வேதனைக்குரிய அம்சமாகவும் மாறியிருக்கிறது. அதிருப்தி அலை அறவே இல்லை என பாஜக தலைவர்கள் முழங்கி வந்தபோதும் அனுபவசாலிகளான அவர்கள் எதார்த்தத்தை உணர்ந்தே இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் வலிமையற்ற கூட்டணி, ஆளும் கட்சிக்கு பெரும்பான்மையினர் மத்தியில் அதிகரித்த ஆதரவு உள்ளிட்ட சாதக அம்சங்கள் நிலவியபோதும், 10 ஆண்டுகளாக தொடர்ந்த ஆட்சி காரணமாக மக்கள் மத்தியில் எழும் அதிருப்தி அலையை சமாளிக்க பாஜக திணறி வருகிறது.

மோடி
மோடி

அதிருப்தி அலையை சமாளிக்கும் நோக்கில் முதல் அதிரடியாக சிட்டிங் எம்பிக்கள் 100 பேருக்கு சீட் மறுத்துள்ளது. கிட்டத்தட்ட 3ல் ஒருவர் இதனால் கட்சியில் பாதிப்பு கண்டுள்ளார். கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் இது அதிருப்தியை உருவாக்கும் என்றாலும், தேர்தல் முடிவில் பெரும் வெற்றியின் மூலம் அவர்களை எளிதில் சமாளித்துவிடலாம் என பாஜக தலைமை இறுமாந்திருக்கிறது.

மீண்டும் வெற்றிபெற வாய்ப்பில்லாதவர்கள், செயல்படாதவர்கள், சர்ச்சைக்கு ஆளானவர்கள், எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு எளிதில் இரையாக வாய்ப்புள்ளோர் என பல்வேறு பரிசீலனைகளின் கீழ் 100 சிட்டிங் எம்பிக்களுக்கு பாஜக சீட் மறுத்துள்ளது. இந்த வகையில் ஜெனரல் வி.கே. சிங், அஷ்வினி சௌபே மற்றும் மீனாட்சி லேகி போன்றவர்களுக்கு பாஜக சீட் மறுத்திருப்பது பாஜகவினருக்கே அதிர்ச்சி தந்திருக்கிறது. இது தவிர சாத்வி பிரக்யா தாக்கூர், ரமேஷ் பிதுரி, பிரவேஷ் வர்மா போன்ற சர்ச்சைக்குரிய தலைவர்களையும் பாஜக களையெடுத்துள்ளது.

எந்த வகையிலும் பாஜக மீதான அதிருப்திக்கு வாய்ப்பளித்து விடக்கூடாது என்பதே இதன் பின்னணியில் உள்ளது. மோடி எதிர்நோக்கும் கட்சிக்கான 370 எம்பிக்களுக்கள் இலக்கை எட்டவும் இந்த முனைப்பு உதவும் என பாஜக தலைமை கணித்துள்ளது. இதுதவிர கூட்டணிக்கான 400 எம்பிக்கள் என்ற வெற்றி இலக்கை எட்டவும் பாஜக திணறி வருகிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணுடன் இறங்கி வந்து கூட்டணிக்கு பாஜக இணங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாடு, ஒடிசா மற்றும் பஞ்சாப்பில் கூட்டணி கட்சிகள் பாஜகவை புறக்கணித்திருப்பது, பாஜகவுக்கு புதிய நெருக்கடியை தந்துள்ளது. எனவே வேட்பாளர் தேர்வில் கடுமையான தணிக்கைகளை பின்பற்றுகிறது.

மோடி உடன் மபி முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான்
மோடி உடன் மபி முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான்

இதற்காக மக்கள் மத்தியில் செல்வாக்கு வாய்ந்த சொந்தக் கட்சியின் முன்னாள் முதல்வர்களுக்கு எம்பி சீட் வழங்குவது, செல்வாக்கான காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்களை வளைப்பது போன்றவற்றையும் பாஜக மேற்கொண்டுள்ளது. முன்னாள் முதல்வர்களான மத்தியபிரதேசத்தின் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ஹரியாணாவின் மனோகர் லால் கட்டார் போன்றோர் இதற்கு உதாரணமாகும். காங்கிரஸிலிருந்து தாவியர்களில் நவீன் ஜிண்டல் மற்றும் அசோக் தன்வார் போன்றோர் அடங்குவர். வழக்கமாக எதிர்கட்சிகளுடன் மோதி வெல்வதற்கு பதில் தனது முரண்பாடுகளுடன் மோதியே வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் நிர்பந்தத்தில் இம்முறை பாஜக தடுமாறுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in