பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் எடியூரப்பாவுக்கு அழைப்பு இல்லை: கர்நாடகாவில் பரபரப்பு

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் எடியூரப்பாவுக்கு அழைப்பு இல்லை: கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேசிய இளைஞர் விழா நிகழ்வுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

கர்நாடக மாநிலம் ஹூப்பாலியில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இளைஞர் தின விழாவை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைத்தார். இதில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது கர்நாடகா அரசியலில் பெரும் சலசலப்பை உருவாக்கி உள்ளது. இது அரசு நிகழ்ச்சி என்பதால் முன்னாள் முதல்வர் அழைக்கப்படவில்லை என்று பாஜக கூறியுள்ளது. சமீபத்தில் மாண்டியாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற கட்சி நிகழ்ச்சியையும், எடியூரப்பா வெளிநாட்டில் இருந்ததால் புறக்கணித்தார்.

இருப்பினும், கட்சியில் புறக்கணிக்கப்படுவதாக வரும் செய்திகளை எடியூரப்பா பலமுறை நிராகரித்துள்ளார்.

இதே காரணத்திற்காக, இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என பாஜக தெரிவித்துள்ளது.

26வது தேசிய இளைஞர் விழா ஜனவரி 16-ம் தேதி வரை ஹுப்பள்ளி-தர்வாடில் நடைபெற உள்ளது. கர்நாடக அரசுடன் இணைந்து இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in