வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு ரூ.2000: காங்கிரஸுக்கு போட்டியாக பாஜக அறிவிப்பு!

முதல்வர் பசவராஜ் பொம்மை
முதல்வர் பசவராஜ் பொம்மை

‘க்ருஹிணி சக்தி’ திட்டத்தின் கீழ் மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனது அரசு ரூ. 2,000 வழங்கும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

சிக்கமகளூரு அருகே செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “‘க்ருஹிணி சக்தி’ திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்திற்கும் தனது அரசு மூலம் ₹2,000 வழங்கப்படும்” என அறிவித்தார். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக்கின் அறிவிப்பு குறித்த கேள்வியின்போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் பொம்மை, "ஜனவரி 14 அன்று நான் இத்திட்டத்தை அறிவித்தேன். இத்திட்டத்தின் நோக்கம் ஏழைக் குடும்பங்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும், அவர்களின் சுகாதார நோக்கங்களுக்கு உதவுவதற்குமாகும்" என்று கூறினார்.

இந்த ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, கடந்த திங்களன்று க்ருஹ லட்சுமி திட்டத்தை அறிவித்தார். அத்திட்டம் மூலமாக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸுக்கு வாக்களித்தால் பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, இந்த திட்டம் 150 மில்லியன் இல்லத்தரசிகளுக்கு நேரடியாக உதவும் என்றார். அதிகமான எல்பிஜி விலை மற்றும் ஒரு பெண் சுமக்க வேண்டிய விலையுயர்ந்த தினசரி செலவுகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கான கட்சியின் முயற்சியே இந்தத் திட்டம் என்று கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

காங்கிரஸுக்கு வாக்களித்தால், பெண் குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கப்படும் என்ற புதிய உத்தரவாதம், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநில மக்களை தவறாக வழிநடத்தும் விரக்தியின் முயற்சி என்று முன்னதாக பசவராஜ் பொம்மை கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in