பெரியார் தி.க- பாஜக- இந்து முன்னணியினர் மோதல்: மனுதர்ம நூல் எரிப்பு போராட்டத்தால் பதற்றம்

பெரியார் தி.க- பாஜக- இந்து முன்னணியினர் மோதல்: மனுதர்ம நூல் எரிப்பு போராட்டத்தால் பதற்றம்

மனுதர்ம நூல் எரிக்கும் போராட்டம் நடத்திய பெரியார் தி.கவினரை எதிர்த்து,  புதுச்சேரியில் பாஜக, இந்து முன்னணியினரும் போராட்டம் நடத்தியதால் இரு  தரப்புக்கும்  மோதல் ஏற்பட்டு பலர் காயம் அடைந்தனர்.  30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாட்டின் பெரும்பான்மை மக்களான பட்டியலின  மக்களை பஞ்சமர்கள் என்றும்,  பிற்படுத்தப்பட்ட மக்களை சூத்திரர்கள் - விபச்சாரி மகன் என்றும்,  பெண்களை விபச்சாரிகள் என்றும் இழிவுபடுத்தும் பார்ப்பன மனுதர்ம நூல் எரிப்பு போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில்  இன்று புதுச்சேரியில் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. 

அப்போது இந்தப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்ற கோரிக்கையோடு ஊர்வலமாக அங்கு வந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து  பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் சாலையோரத்தில் இருந்த கற்களை தூக்கி வீசி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் வீசிய கற்கள்  அங்கு  பாதுகாப்புக்கு  இருந்த போலீஸார்  மீதும்  விழுந்தன. 

தங்களை நோக்கி அவர்கள் கற்களை வீசியதால்  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் அவர்கள் மீது   திருப்பி கற்கள் வீசி தாக்கினர். தொடர்ந்து இருதரப்பினரும் நடுரோட்டிலேயே கற்களை வீசியும், செருப்பை தூக்கி எறிந்தும் தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கற்கள் சாலையில் கிடந்தன. இதில் இந்து முன்னணி பிரமுகர்  ஒருவர்  உட்பட பலருக்கும் காயம் ஏற்பட்டது. அதையடுத்து பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் இரு தரப்பிலும் பலரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in