அணிகள் மூன்று மோதுவதால் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பதில் யாருக்கும் இப்போது சந்தேகம் இல்லை. இரண்டாமிடத்தைப் பிடிப்பதில் தான் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் இப்போது பந்தயக் குதிரை ரேஸ் நடக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜக 20.6 சதவீத வாக்குகளைப் பெறும். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அதைவிட 4 சதவீதம் குறைவான வாக்குகளைத்தான் பெறும் என வந்திருக்கும் கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுக வட்டாரத்தை சற்றே கலக்கமடையச் செய்திருக்கின்றன.
அதிமுகவுக்கான வழக்கமான வாக்கு வங்கியானது எம்ஜிஆர் காலம் தொட்டு ஜெயலலிதா காலம் வரை அப்படியே அச்சுக் குலையாமல் இருந்து வந்தது. ஜெயலலிதா மறைந்த பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள் என எதிலுமே அதிமுக வெற்றிமுகம் காணவில்லை. ஆனாலும் அந்தக் கட்சிக்கான வாக்கு வங்கி 30 முதல் 40 சதவீதம் வரை இருப்பது அந்தத் தேர்தல்களிலும் உறுதியானது.
2019 மக்களவைத் தேர்தலில் 30.56 சதவீத வாக்குகளைப் பெற்ற அதிமுக, 2021 சட்டமன்றத் தேர்தலில் 39.72 சதவீத வாக்குகளைப் பெற்றது. அப்படி இருக்கையில், இப்போது மட்டும் எப்படி அதிமுகவின் வாக்கு வங்கி 20 சதவீதத்துக்கு கீழே செல்லும் என்று கேட்டால், அதிமுக ரெண்டுபட்டு நிற்பதை காரணமாகச் சொல்கிறார்கள்.
ஆக, இந்தத் தேர்தலில் வெற்றியைவிட, அதிமுகவின் நிலையான வாக்குவங்கி எங்கேயும் போய்விடவில்லை அது என்னிடம் தான் இருக்கிறது என்று நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. குறைந்தபட்சமாக 30 சதவீத வாக்குகளைப் பெற்றாலே இரண்டாமிடத்துக்கு அதிமுக வந்துவிடும். இதில் எத்தகைய தடுமாற்றமும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கூட்டணியை கட்டமைக்க கண்கண்ட திசை எல்லாம் வலை வீசுகிறது அதிமுக. எதைக் கொடுத்தாவது தேமுதிக மற்றும் பாமகவை உள்ளே கொண்டு வர முனைப்புக் காட்டுகிறது.
கூட்டணில் பாமக இருந்தால் மட்டுமே வடமாவட்டங்களில் 20 தொகுதிகளில் அதிமுக இரண்டாமிடத்துக்கு வரும் என்பது கடந்த தேர்தல்களின் கணக்கு. அதேபோல் மாநிலம் முழுமையும் முன்பு 7 முதல் 8 சதவீதம் வரை வாக்கு வங்கியை வைத்திருந்த தேமுதிகவுக்கு இப்போது ஆகக் குறைவாக 3 சதவீத வாக்கு இருந்தாலும் அதையும் பாஜக பக்கம் போகாமல் தடுத்து இழுக்க வேண்டிய கட்டாயமும் அதிமுகவுக்கு இருக்கிறது.
அதேபோல பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தன்னால் தான் பாஜக வளர்ந்திருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறார். தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி பாஜக தான் என்றும் அவர் சொல்லி வருகிறார். இதையெல்லாம் நிரூபிக்க அவர் நடத்திய என் மண்... என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பிரம்மாண்ட கூட்டம் கூட்டப்பட்டது. அண்ணாமலையின் களப்பணியை பிரதமர் மோடியும் பாராட்டிப் புகழ்ந்துள்ளார்.
எனவே, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜகவை இரண்டாம் இடத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் அண்ணாமலையும் இருக்கிறார். அதற்காக அவரும் பிரதான கட்சிகளுக்கு தூதுவிடுகிறார். சிறிய கட்சிகளை எல்லாம் பாஜக பக்கம் திருப்பி வருகிறார்.
ஆனால், இதெல்லாமே பாஜகவுக்கு 20 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தந்துவிடுமா என்பதை உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஒருவேளை, அண்ணாமலை எதிர்பார்க்கும் அந்த அதிசயம் நிகழ்ந்து ஒன்றிரண்டு தொகுதிகளில் பாஜக வெற்றியும் பெற்றுவிட்டால் அதை வைத்து, தமிழகத்தில் 2026 தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்பதான தோற்றத்தை அவர்களால் உருவாக்கிவிட முடியும்.
பாஜகவுக்கு இரண்டாவது இடம் கிடைக்கும் என்ற கணிப்பு குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசினோம். ‘’நோட்டாவுக்கு குறைவான வாக்குகள் வாங்கிய பாஜக தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்துக்கு வரும் என்பதை யோசிக்கக்கூட முடியவில்லை. கடந்த தேர்தல்களில் அவர்களின் வாக்கு அதிகபட்சமே மூன்று சதவீதம் தான். அப்படி இருந்தவர்கள் இப்போது, இரண்டாம் இடம் பிடிப்போம் என்று சொல்வதை யார் நம்ப முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்.
பாஜக தரப்பிலோ, "அதிமுகவினர் சொல்வது இருக்கட்டும்... மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டனர். எங்கு பார்த்தாலும் மோடிதான் பிரதமர் ஆவார் என்று எதிர்க்கட்சிகளே கூட பேசுவதைக் கேட்கமுடிகிறது. பிரதமரின் தமிழக வருகை தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. ஊழல் கறைபடிந்த திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். நாங்கள் இரண்டாமிடத்துக்குப் போட்டிபோடவில்லை; முதலிடத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம்” என்கிறார்கள்.
எதிர்க்க சரியான ஆளில்லாமல் திமுக கூட்டணி வலுவாக இருப்பதால் 59.7 சதவீத வாக்குகளைப் பெறும் என கணிப்புகள் சொல்கின்றன. அந்தளவுக்கு இல்லை என்றாலும் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறுவதால் திமுக அணியின் வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. இரண்டாம் இடத்துக்கு வரப்போவது யார் என்பதுதான் சஸ்பென்ஸ்.
ஒருவேளை, அந்த இடத்தை பாஜக பிடித்துவிட்டால் அண்ணாமலை ராஜாவாகிவிடுவார். அதிமுக மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டால் அது , எடுத்ததெல்லாம் தோல்வி என்று விமர்சிக்கப்படும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடலாம்!