பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை நன்னடத்தை அடிப்படையில் விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு மற்றும் குஜராத் அரசு பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளான 11 பேரை விடுதலை செய்ததற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மற்றும் கபில் சிபல் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளிக்க குஜராத் அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளனர்.

2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது 21 வயதான பில்கிஸ் பானு ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ​​​​அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும், பில்கிஸ் பானுவின் மூன்று வயது மகள் உட்பட அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற 11 பேரை கடந்த ஆகஸ்ட் 15-ல், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்தது குஜராத் அரசு.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

விடுதலையான 11 குற்றவாளிகளுக்கு தடபுடலாக வரவேற்பளித்த பாஜகவுடன் தொடர்புடைய நபர்கள், அவர்களுக்கு மாலையிட்டு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். மேலும், அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கினர். குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக பேசிய பில்கிஸ் பானு, “இந்த சம்பவம் நீதி அமைப்பு மீதான எனது நம்பிக்கையை உலுக்கியது. மீளமுடியாத அதிர்ச்சியில் உள்ளேன்” என தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறிய நிலையில், இவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி யுடி சால்வியும் குஜராத் அரசின் முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in