3 குழந்தைகள் இருப்பதை மறைத்த மேயர் தகுதி நீக்கம்... தேர்தல் ஆணையம் அதிரடி!

3வது குழந்தை இருப்பதை மறைத்ததற்காக மேயர் தகுதிநீக்கம்...தேர்தல் ஆணையம் அதிரடி!
3வது குழந்தை இருப்பதை மறைத்ததற்காக மேயர் தகுதிநீக்கம்...தேர்தல் ஆணையம் அதிரடி!

தனது மூன்றாவது குழந்தை பற்றிய தகவலை மறைத்ததற்காக பீகார் மாநிலம் சாப்ரா மாநகராட்சியின் மேயர் பதவியிலிருந்து ராக்கி குப்தாவை அம்மாநில தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது.

2022ம் ஆண்டு தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், ராக்கி குப்தா தனது இரண்டு குழந்தைகளைப் பற்றிய தகவல்களை மட்டும் கூறி விட்டு, மூன்றாவது குழந்தையைப் பற்றிய தகவலை மறைத்திருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் மாடலாக இருந்து அரசியலில் குதித்த ராக்கி குப்தா, முன்னாள் மேயர் சுனிதா தேவியை தோற்கடித்தார்.

பீகார் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ளது. எனவே, ராக்கி தேவியின் 3 குழந்தைகள் குறித்து சுனிதா தேவி புகாரளித்தார். இதன் மீது கடந்த ஐந்து மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்ததைத் தொடர்ந்து பீகார் தேர்தல் ஆணையம் இப்போது தகுதி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.

முன்னதாக, சரன் மாவட்ட மாஜிஸ்திரேட் தனது அறிக்கையில், ராக்கி குப்தா மற்றும் அவரது கணவர் வருண் பிரகாஷ் ஆகியோருக்கு மூன்றாவது குழந்தை இருப்பதாக பீகார் எஸ்இசிக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இருப்பினும், அந்த குழந்தை வருண் பிரகாஷின் உறவினர்களால் தத்தெடுக்கப்பட்டது என்று கூறினார்கள். ஆனால், குழந்தையின் ஆதார் விவரங்களில் ராக்கி குப்தா மற்றும் வருண் பிரகாஷ் ஆகியோரின் பெயர்கள் உயிரியல் பெற்றோர்களாக உள்ளன என்று கூறினார்

தனது தகுதி நீக்கம் குறித்து ஊடகங்களிடம் பேசிய ராக்கி குப்தா, “எனது ஆறு வயது மகன் ஸ்ரீ பிரகாஷை என் கணவரின் உறவினர்கள் சட்டப்பூர்வமாக தத்தெடுத்துள்ளனர். இதனால் எனக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ளனர்” என்று கூறினார்.

பீகார் முனிசிபாலிட்டி சட்டம், 2007ன் பிரிவு 18 (1) (m)ன் கீழ் ராக்கி குப்தா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன்படி, பீகார் குடிமகனுக்கு ஏப்ரல் 4, 2008 க்குப் பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால், அவர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்று கூறுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் குழந்தையை தத்து கொடுத்தாலும், அவர்கள் அந்தக் குழந்தையின் உயிரியல் பெற்றோர்களாகவே கருதப்படுவார்கள் என்றும், நகராட்சித் தேர்தலுக்குத் தகுதியற்றவர்களாகவே இருப்பார்கள் என்றும் அதே சட்டம் தெளிவுபடுத்துகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராக்கி குப்தா பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பிரபல மாடலாக ஃபேஷன் துறையில் வலம் வந்த ராக்கி குப்தா அதன்பின்னர் அரசியலில் குதித்தார். இவர் 2021ல் நடைபெற்ற மிஸஸ் பீகார் மாடலிங் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ராக்கி குப்தா சமூக ஊடக வலைத்தளங்களிலும் பிரபலமானவர். இவர் இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 70,000 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in