தேசியக்கொடியுடன் போராடிய இளைஞர்: வெறித்தனமாக தாக்கிய கூடுதல் ஆட்சியர் - அதிர்ச்சி வீடியோ

தேசியக்கொடியுடன் போராடிய இளைஞர்: வெறித்தனமாக தாக்கிய கூடுதல் ஆட்சியர் - அதிர்ச்சி வீடியோ

பிஹார் மாநிலம் பாட்னாவில் ஆசிரியர் பணி நியமனம் தாமதப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய இளைஞர் மீது மாவட்ட கூடுதல் ஆட்சியர் கே கே சிங் வெறித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் பணி நியமனம் தாமதமாவதைக் கண்டித்து பாட்னாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடியும், தண்ணீர் பீய்ச்சியும் கூட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற கூடுதல் ஆட்சியர் கே.கே.சிங், தேசியக்கொடியை ஏந்தியவாறு தரையில் படுத்தபடி முழக்கம் எழுப்பிய இளைஞர் ஒருவரை குச்சியால் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகளின் வீடியோ வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வைரலாகியுள்ள அந்த வீடியோவில், தேசிக்கொடியை ஏந்திய இளைஞரை போலீஸார் இழுத்து செல்வதும், கூடுதல் ஆட்சியர் லத்தியால் அடிப்பதும் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in