சந்திரசேகர் ராவ் கட்சியின் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி: தெலங்கானாவில் பரபரப்பு

சந்திரசேகர் ராவ் கட்சியின் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி: தெலங்கானாவில் பரபரப்பு

தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கான முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேர் பண்ணை வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெலங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா ராஷ்டிர சமிதியின் நான்கு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்கு குதிரை பேர முயற்சி நடைபெற்றது. அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் என்று காவல்துறை தலைவர் ஸ்டீபன் ரவீந்திரா தெரிவித்தார். ரூ.100 கோடி அல்லது அதற்கு அதிகமான தொகைக்கு ஒப்பந்தங்கள் நடைபெற்றிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் எம்எல்ஏக்களை கட்சி மாற்ற முக்கிய நபருக்கு ரூ.100 கோடியும், ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.50 கோடியும் தருவதாக கூறியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் போலீஸாருக்கு போன் செய்து, "கட்சி மாறுவதற்கு தங்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிக்கிறார்கள். கட்சி மாறுவதற்கு பெரும் பணம், ஒப்பந்தங்கள் மற்றும் பதவிகள் வழங்க உறுதியளிப்பதாக அவர்கள் கூறினார்கள்" என்று புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து அஜீஸ் நகரில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் நேற்று மாலை சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் போலி அடையாளங்கள் மூலம் ஹைதராபாத்திற்கு வந்தவர்கள் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹரியானாவின் பரிதாபாத்தைச் சேர்ந்த சாமியார் ராம் சந்திர பாரதி என்ற சதீஷ் சர்மா, திருப்பதியைச் சேர்ந்த சாமியார் சிம்ஹயாஜி மற்றும் தொழிலதிபர் நந்தகுமார் என அடையாளம் காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தந்தூர் எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டியின் பண்ணை வீட்டில்தான் இந்த குதிரை பேர முயற்சி நடந்துள்ளது. அவரே போலீஸாருக்கு புகார் அளித்துள்ளார். இதன்பின்னர் சம்மந்தப்பட்ட 4 எம்எல்ஏக்களும் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான பிரகதி பவனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தெலுங்கானாவில் "ஆபரேஷன் லோட்டஸ்" மூலம் டிஆர்எஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இது தொடர்பாக பேசிய தெலுங்கானா பாஜக தலைவர்கள் டிகே அருணா மற்றும் நிஜாமாபாத் பாஜக எம்பி டி அரவிந்த் ஆகியோர், “முனுகோட் தொகுதி இடைத்தேர்தலில் கவனத்தை திசை திருப்பவே முதல்வர் சந்திரசேகர் ராவும் அவரது கட்சியினரும் குதிரை பேர நாடகத்தை நடத்தியுள்ளனர். இது ஒரு நாடகம். முனுகோட்டில் டிஆர்எஸ் தோற்கும் என்பதை கேசிஆர் புரிந்து கொண்டார்" என்று தெரிவித்துள்ளனர்

இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தவ் தாக்கரே அரசாங்கத்தை ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து பாஜக கவிழ்த்தது. சமீபத்தில், அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, டெல்லி மற்றும் பஞ்சாபில் உள்ள தனது எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in