'உட்கட்சி பூசலை சமாளிக்க முடியவில்லை’ - ஆம் ஆத்மியில் இணைந்த காங்கிரஸ் தலைவர்கள்

'உட்கட்சி பூசலை சமாளிக்க முடியவில்லை’ - ஆம் ஆத்மியில் இணைந்த காங்கிரஸ் தலைவர்கள்

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர்.

உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர பிரசாத் ரதுரி, மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர் கமலேஷ் ராமன் மற்றும் சமூக ஊடக ஆலோசகர் குல்தீப் சவுத்ரி ஆகியோர் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததாக ஆம் ஆத்மி கட்சியின் உத்தரகாண்ட் ஒருங்கிணைப்பாளர் ஜோத் சிங் பிஷ்ட் தெரிவித்தார். அவர்களை கட்சிக்கு வரவேற்ற மணீஷ் சிசோடியா, உத்தராகண்டில் ஆம் ஆத்மி கட்சிக்கு இவர்களின் வருகை பலம் சேர்க்கும் என தெரிவித்தார்.

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்த நிலையில், கட்சியில் உட்கட்சி பூசல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், காங்கிரஸிலிருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்தனர். 3 மூத்த தலைவர்களின் ராஜினாமா பற்றி கேள்விப்பட்டதும், உத்தராகண்ட் சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் மற்றும் காதிமா எம்எல்ஏ புவன் சந்திர கப்ரி உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள், முன்னாள் கேபினட் அமைச்சர் ஹரக் சிங் ராவத்தை அவரது இல்லத்தில் சந்தித்து கட்சி மீதான தங்கள் கவலையைப் பகிர்ந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் பங்கேற்கவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in