எம்பி- சுவாதி மாலிவாலை தாக்கிய பிபவ்குமாரை கேஜ்ரிவால் பாதுகாக்கிறார்: பாஜக விமர்சனம்

லக்னோ விமான நிலையத்தில் முதல்வர் கேஜ்ரிவாலுடன் பிபவ்குமார் (வட்டமிடப்பட்டுள்ளவர்)
லக்னோ விமான நிலையத்தில் முதல்வர் கேஜ்ரிவாலுடன் பிபவ்குமார் (வட்டமிடப்பட்டுள்ளவர்)

ஆம் ஆத்மி பெண் எம்பி- சுவாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் பிபவ்குமார், லக்னோ விமான நிலையத்தில் முதல்வர் கேஜ்ரிவாலுடன் காணப்பட்டதற்கு பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமார். இவர், சமீபத்தில் முதல்வர் கேஜ்ரிவாலை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்ற ஆம் ஆத்மி எம்பி- சுவாதி மாலிவாலை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக எம்பி- சுவாதி மாலிவால், டெல்லி போலீஸாரிடம் முதல்வரின் இல்லத்திலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். மேலும், சுவாதி மாலிவாலிடம் பிபவ்குமார், தவறாக நடந்து கொண்டதாக ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங்கும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பெண் எம்பி-யை தாக்கிய பிபவ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் நேற்று முதல்வர் கேஜ்ரிவால் இல்லத்துக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் இணைந்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த உள்ளார். இதற்காக அவர் நேற்று நள்ளிரவு உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவுக்கு விமானம் மூலம் சென்றடைந்தார்.

அப்போது அவருடன் எம்பி-சஞ்சய் சிங் மற்றும் பிபவ்குமார் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், எம்பி-சுவாதி மாலிவாலை தாக்கிய பிபவ்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கேஜ்ரிவால் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்வதாக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “72 மணி நேரம். பிபவ் குமார் மீது எப்ஐஆர் இல்லை. அதற்கு பதிலாக கேஜ்ரிவால் அவரைப் பாதுகாக்கிறார். அவருடன் சுற்றித் திரிவது.. கெஜ்ரிவாலின் உத்தரவின் பேரில் சுவாதி மாலிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தெளிவாகிறது.

இப்போது அமைதியாக இருக்கவோ அல்லது சம்பவத்தை மாற்றவோ சுவாதி மாலிவாலுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அவர் இன்னும் காவல்துறையை அணுகவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் உண்மையான முகம்- பெண்கள் எதிர்ப்பு அராஜக கட்சி" என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in