‘முதல்வர் என்னை துபாய் போகுமாறு சொன்னார்’ சூதாட்ட செயலி உரிமையாளர் கிளப்பும் பகீர் புகார்!

முதல்வர் பூபேஷ் பாகேல் - அமலாக்கத்துறை
முதல்வர் பூபேஷ் பாகேல் - அமலாக்கத்துறை

சத்தீஸ்கர் மாநிலத்தின் தேர்தல் நெருக்கத்தில், முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு எதிராக மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் பகீர் புகார்களை கிளப்பியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பரபரப்புகளுக்கு இணையாக மகாதேவ் சூதாட்ட செயலி குறித்தான புகார் மற்றும் விசாரணைகளும் கவனம் பெற்றுள்ளன. சூதாட்ட செயலி தரப்பிலிருந்து முதல்வர் பூபேஷ் பாகேல் ஆதாயம் பெற்றதாக மத்திய விசாரணை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இதன் முத்தாய்ப்பாக சூதாட்ட செயலியின் உரிமையாளர் என்று சொல்லிக்கொள்ளும் சுபம் சோனி என்பவர், துபாயில் இருந்தபடி சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

சுபம் சோனி
சுபம் சோனி

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் தேடப்படும் குற்றவாளியான சுபம் சோனி துபாயில் இருந்தபடி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு எதிராக புகார் எழுப்பி இருக்கிறார். ’பூபேஷ் முறைகேடாக ஆதாயம் பெற்றது முதல் தன்னை துபாய் செல்லுமாறு கூறியது வரை’ பலவற்றை, ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றின் பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமலாக்கத்துறை அசிம் தாஸ் என்ற ஏஜெண்டிடம் இருந்து ரூ5.39 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தது. இந்த தொகை, பூபேஷ் பாகேலுக்காக துபாயில் இருந்து சுபம் சோனி அனுப்பியதாக அசிம் தாஸ் தெரிவித்திருந்தார்.

மேலும், சூதாட்ட செயலியுடன் இணைக்கப்பட்ட சில பினாமி வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை கண்டறிந்தது. அந்த வங்கிக் கணக்குகள் மற்றும் அவற்றில் இருந்த ரூ.5.59 கோடி ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. அசிம் தாஸ் மற்றும் அவரது செல்போன், மின்னஞ்சல் போக்குவரத்து ஆகியவற்றையும் துழாவியதில், சூதாட்ட செயலி தரப்பிலிருந்து சத்தீஸ்கர் முதலர் பூபேஷ் பாகேலுக்கு இதுவரை ரூ.508 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.

மகாதேவ் செயலி - பூபேஷ் பாகேல்
மகாதேவ் செயலி - பூபேஷ் பாகேல்

இந்தப் புகார்களின் மத்தியில், சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் அமலாக்கத்துறை அங்கே வேகம் காட்டியதும், வாக்குப்பதிவுக்கு 2 நாள் முன்பாக சூதாட்ட செயலி உரிமையாளர் தரப்பிலிருந்து சத்தீஸ்கர் முதல்வருக்கு எதிராக புகார்கள் தொடுக்கப்பட்டிருப்பதும் தனியாக கேள்விகளை எழுப்பியுள்ளன. காங்கிரஸ் வலுவாக இருக்கும் சத்தீஸ்கரில் இந்த புகார்களும், அவை தொடர்பான விசாரணைகளும் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in