பஞ்சாப் முதல்வராக இன்று பதவியேற்கிறார் பகவந்த் மான்!

பஞ்சாப் முதல்வராக இன்று பதவியேற்கிறார் பகவந்த் மான்!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றிருக்கும் நிலையில், அம்மாநில முதல்வராக இன்று பொறுப்பேற்கிறார் பகவந்த் மான். ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து அரசியலுக்கு நுழைந்த அவர், சங்க்ரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர். இந்தத் தேர்தலில் துரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தல்வீர் சிங் கோல்டியைவிட 58,026 அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற அவர், முன்னதாக மக்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.

பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் அவர் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். தான் மட்டும் பதவியேற்கவில்லை; பஞ்சாபின் 3 கோடி மக்களும் பதவியேற்பார்கள் என்று கூறியிருந்த அவர், ஆண்கள் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து வர வேண்டும்; பெண்கள் மஞ்சள் நிற துப்பாட்டா அணிந்துவர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் 3 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதற்காக மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருக்கிறது.

முன்னாள் மனைவி வாழ்த்து

பகவந்த் மான் தனது மனைவி இந்தர்ப்ரீத் கவுரை 2015-ல் விவாகரத்து செய்தார். அவர் தனது இரு குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். தற்போது பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அவரது மகன் தில்ஷன் மான்(17), மகள் சீரத் கவுர் மான் (21) இருவரும் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கின்றனர். இந்நிலையில், தனது கணவர் பஞ்சாப் முதல்வராவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் இந்தர்ப்ரீத் கவுர், “அவருக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன்” எனக் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.