மக்களுக்கு பதில் சொல்வோம்... மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு அல்ல: பகவந்த் மான் கோபம்

பகவந்த் மான்
பகவந்த் மான்மக்களுக்கு பதில் சொல்வோம்... மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு அல்ல

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வெளிநாட்டுப் பயணத்திற்காக பள்ளி முதல்வர்களை தேர்வு செய்தது குறித்து முதல்வர் பகவந்த் மானிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே முடிவுகளை எடுக்க வேண்டும், நியமிக்கப்பட்டவர்கள் விலகி இருக்க வேண்டும் என்று பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணத்திற்கான பள்ளி முதல்வர்களை தேர்வு செய்தது தொடர்பாக பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் நடைபெற்ற பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்க 36 அரசுப் பள்ளி முதல்வர்கள் சமீபத்தில் மேற்கொண்ட பயணத்திற்கான தேர்வு செயல்முறை விவரங்களைக் கோரி ஆளுநர் முதல்வருக்கு கடிதம் அனுப்பினார். அதில் இந்த விவகாரத்தில் முறைகேடுகள் பற்றிய புகார்களைப் பெற்றதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், பதினைந்து நாட்களுக்குள் முதல்வர் பகவந்த் மான் பதிலளிக்காவிட்டால், அடுத்த நடவடிக்கைக்கு சட்ட ஆலோசனையைப் பெறுவேன் என்றும் ஆளுநர் புரோஹித் கூறினார்.

இந்த நிலையில் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் ஆளுநர் புரோஹித்தின் பெயரை குறிப்பிடாமல் பேசிய முதல்வர் மான்,“பஞ்சாபில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே முடிவுகளை எடுக்க வேண்டும். நியமிக்கப்பட்டவர்கள் தேவையில்லாமல் தலையிடக்கூடாது, விலகியிருக்க வேண்டும். ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உயர்ந்தவர்கள். எங்களுக்கும் சட்டம் தெரியும். அவர்கள் எங்களைத் தடுக்கும் அதே சட்டத்தின் மூலம் அவர்களுக்குப் பதிலளிப்போம்" என தெரிவித்தார்.

ஆளுநரின் கடிதம் குறித்து நேற்று ட்வீட் மூலம் பதிலளித்த பகவந்த் மான், "அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நானும் எனது அரசும் மூன்று கோடி பஞ்சாபிகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட எந்த ஆளுநருக்கும் அல்ல. இதை எனது பதிலாகக் கருதுங்கள்" என்று அவர் பஞ்சாபியில் ட்வீட் செய்திருந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பின்னர் ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் கடிதம் பஞ்சாப் அரசுக்கு "அப்பட்டமான அச்சுறுத்தல்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in