`அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகள் ஒன்றிணையுங்கள்'

முல்லைப் பெரியாறு அணை மீட்பு போராட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் பேச்சு
முல்லைப் பெரியாறு அணை மீட்பு போராட்டத்தில் பி.ஆர்.பாண்டியன்
முல்லைப் பெரியாறு அணை மீட்பு போராட்டத்தில் பி.ஆர்.பாண்டியன்படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்டெடுக்கவும், வைகை அணைப் பாசனத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் முல்லைப் பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மதுரை பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகே நடந்த இந்த உண்ணாவிரதத்துக்கு பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது, "தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் கேரள, கர்நாடக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் ஒத்த கருத்தோடு செயல்படுகின்றன. கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் அரசும்கூட, தமிழக உரிமையைப் பறிக்கும் வகையிலேயே செயல்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையை சீரமைத்தால், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டியதிருக்கும் என்பதால், சீரமைக்கும் பணிக்குத் தடை மேல் தடை போடுகிறது. எனவே, இந்த விஷயத்தில் அரசியல் அணி என்பது வேறு, நீர்ப்பாசன உரிமை என்பது வேறு என்பதை தமிழகத்தை ஆளும் திமுகவும் பிற அரசியல் கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும். ஒட்டுமொத்த விவசாயிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்றார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆர்ப்பாட்டம்...
தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆர்ப்பாட்டம்...படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அதைத் தொடர்ந்து விவசாய சங்க நிர்வாகிகள் முத்துராமலிங்கம், எல்.ஆதிமூலம், மதுரைவீரன், ஆர்.உதயகுமார், இராம.முருகன், ராமன், மாணிக்கவாசகம் ஆகியோர் பேசுகையில், "பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கேற்ப பேபி அணையை பலப்படுத்தும் பணியை உடனே தொடங்க வேண்டும். அணையின் நிர்வாக அதிகாரங்கள் அனைத்தையும் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு மாற்ற வேண்டும். கேரளப் பொறியாளர்களைப் போலவே தமிழகப் பொறியாளர்களும் அணைப் பகுதியிலேயே தங்கிப் பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அணையில் பல கோடி செலவில் நமது அரசு வாங்கி, இயக்காமல் நிறுத்திவைத்துள்ள தமிழன்னை படகுப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும். புதிய அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக, தான் கொடுத்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும். 'ரூல்கர்வ்' என்ற புதிய விதியைப் புகுத்தி, 142 அடி தண்ணீர் தேக்கவிடாமல் செய்வதால் அந்த விதியை தமிழக அரசு அமலாக்கக் கூடாது. நீர் தேக்கப் பகுதியில் கேரளத்தவர்கள் சட்டவிரோதமாக கட்டியுள்ள கார் பார்க்கிங், சொகுசு விடுதிகளை அகற்ற வேண்டும்" என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

உண்ணாவிரதத்தின் போது, "முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மீட்டெடுப்போம்! வைகை அணை பாசனத்தைப் பாதுகாப்போம்! கேரள அரசின் சதியை முறியடிப்போம்! மத்திய அரசின் துரோகத்தை அம்பலப்படுத்துவோம்!" ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டுவதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திலும் முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பான கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in