கட்டிடத்தை இடிக்காதீர்கள்... கோரிக்கை வைத்த பெண்ணை மிரட்டிய பாஜக எம்எல்ஏ: வைரல் வீடியோ!

கட்டிடத்தை இடிக்காதீர்கள்... கோரிக்கை வைத்த பெண்ணை மிரட்டிய பாஜக எம்எல்ஏ: வைரல் வீடியோ!

கர்நாடகாவில் தனது கட்டிடத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கன மழை காரணமாக பெங்களூருவின் மகாதேவ்பூர் பகுதியின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நல்லூரஹள்ளி ஒயிட்பீல்டு கோடி வட்டம் அருகே உள்ள ராஜகழுவே பகுதியை எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ராஜ் கால்வாயை ஒட்டிய வணிக கட்டிடத்தின் ஒரு பகுதி புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த கட்டிடத்தின் உரிமையாளர் ரூத் சகாய் மேரி அமீலா, அரசு சர்வேயர் மூலம் கணக்கெடுப்பு நடத்தி துறை ரீதியான அனுமதி பெற்று சுவர் கட்டியதாக கூறினார். மேலும், இதற்கான ஆவணங்களைக் காட்டி, இது சட்டப்பூர்வ கட்டுமானம் என்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் முறையிட்டார்.

அந்த பெண்ணின் கையில் இருந்த ஆவணத்தை பறிக்க முயன்ற எம்எல்ஏ, இந்த பெண்ணை அழைத்து சென்று சிறையில் அடையுங்கள் என போலீஸாரிடம் கூறினார். "சார், இது அரசு நிலம் இல்லை. நான் மரியாதையாகப் பேசுகிறேன். நீங்கள் ஒரு பெண்ணிடம் பேசுகிறீர்கள். நீங்கள் என் எம்.எல்.ஏ" என்று அமீலா கெஞ்சும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. "உனக்கு மரியாதை வேண்டுமா? நிலத்தை அபகரித்துவிட்டாய். இதற்கு மேல் உனக்கு மரியாதை வேண்டுமா?" என அந்த பெண்ணிடம் எம்எல்ஏ கோபமாக பேசுகிறார்.

மேலும், "பெண் போலீஸ் எங்கே. இவரை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் உட்கார வைக்கவும்” என்று கொந்தளித்தார்.

வாக்குவாதத்திற்குப் பிறகு, மகளிர் போலீசார் அப்பெண்ணின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றனர். அவரை ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மாலை வரை அங்கேயே அமர வைத்தனர். இரவு 7.30 மணியளவில் காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் அந்த பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பகிர்ந்துள்ள வீடியோவில், “பெண்களுக்கு பாதுகாப்பு என பாஜக பாசாங்குத்தனமாக வாக்குறுதி அளிக்கிறது. மக்கள் பிரதிநிதியாக இருக்கும் பாஜக கட்சியைச் சேர்ந்த அரவிந்த் லிம்பாவலி ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட விதம் மன்னிக்க முடியாதது" என்று கன்னடத்தில் ட்வீட் செய்ததுடன், பாஜக தலைவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

காங்கிரஸின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த லிம்பாவலி, "இதற்கு நான் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், காங்கிரஸை சேர்ந்த ரூத் சாகாய் மேரி, பல ஆண்டுகளாக ராஜ்காலுவை ஆக்கிரமித்து மக்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கிறார், அதைக் காலி செய்யச் சொல்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in