
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுஸ்தவ் பாக்சி இன்று அதிகாலையில் அவரது இல்லத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாரக்பூரில் இருக்கும் கவுஸ்தவ் பாக்சியின் வீட்டில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் பர்டோல்லா காவல் நிலையத்தின் போலீஸ் குழுவினர் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனர். முதலமைச்சருக்கு எதிராக அவதூறாகப் பேசிய கருத்துக்காக பாக்சி மீது வெள்ளிக்கிழமை பர்டோல்லா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
"கவுஸ்தவ் பாக்சியை பாரக்பூரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து கைது செய்துள்ளோம். இதைப் பற்றி எங்களால் அதிகம் பேச முடியாது. எங்கள் அதிகாரிகள் அவருடன் பேசி வருகின்றனர்" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு சாகர்திகி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீதான விமர்சனத்துக்காக, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார் பாக்சி். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, கட்சித் தொண்டர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள்.
பாக்சி மீது ஐபிசியின் 120(பி) (குற்றச் சதி), 504 (அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவதூறு), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.