
மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மேற்குவங்க துணை அமைச்சர் சுப்ரதா சாஹா திடீரென உயிரிழந்தார். அவரது மறைவால் முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சியடைந்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சராக இருந்தவர் சுப்ரதா சாஹா (69). அண்மையில் சுப்ரதாவுக்கு பித்தப்பை அறுவை சிகிச்சை கொல்கத்தாவில் நடைபெற்றது. மருத்துவமனையில் இருந்த அவர் குணமடைந்து நேற்று காலை வீடு திரும்பினார். இந்த நிலையில், அவருக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பெர்காம்பூரில் உள்ள முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாஹா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 10.40 மணியளவில் உயிரிழந்தார்.
சுப்ரதா சாஹா திடீர் மரணம் முதல்வர் மம்தா பானர்ஜியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. "சுப்ரதா சாஹாவுடன் எனக்கு நீண்ட நெடிய உறவு இருந்தது. அவரது அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும். சுப்ரதா சாஹாவின் மறைவால் அரசியல் உலகில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று மம்தா இரங்கல் தெரிவித்துள்ளார்.