நேருவை நம்பியவர்கள் என்ன ஆனார்கள்? – 4 திருச்சி என்.செல்வேந்திரன்

நேருவை நம்பியவர்கள் என்ன ஆனார்கள்? – 4

திருச்சி என்.செல்வேந்திரன்
செல்வேந்திரனின் திருமணத்தை பெரியார் நடத்திவைத்தபோது...

திருச்சி என்.செல்வேந்திரனைப் பற்றி எழுதும்போது, சுருக்கமாக எழுதிவிட முடியாது. அந்த அளவுக்கு திராவிட இயக்க வரலாற்றோடு தொடர்பு கொண்டவர். அவரைப்பற்றிய தகவல்கள் கொஞ்சம் விரிவாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.

2014-ல் திமுகவின் 10-வது மாநில மாநாட்டுக்காக திருச்சி வந்த திமுக தலைவர் கருணாநிதி, மாநாட்டுக்கு முன்னதாக திருச்சி என்.செல்வேந்திரன் மகனுடைய திருமணத்தில்தான் கலந்து கொண்டார். ஒருமுறை, செல்வேந்திரனின் பெயரை நோட்டீசில் போடவில்லை என்பதற்காக, திருச்சி சங்கம் ஓட்டலிலிருந்து பொதுக்கூட்ட மேடைக்கு கிளம்ப மறுத்தவர் கருணாநிதி. அப்போது திருச்சி மாவட்ட திமுக செயலாளராக இருந்த என்.செல்வராஜ், பதறிப்போய் செல்வேந்திரனிடம் ஓடிப்போய் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்புக் கேட்டு, அவரையும் கூட்டத்துக்கு அழைத்துவந்த பிறகுதான் கருணாநிதி சமாதானமாகி கிளம்பினார்.

’’செல்வேந்திரன் அவர்கள் இந்த இயக்கத்தில் இன்று நேற்றல்ல, நம்முடைய கொள்கைகளில் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போன்ற திராவிட இயக்கப் பெரியோர்களின், நண்பர்களின், தோழர்களின், உற்றார் உறவினர்களின் பேரன்பைப் பெற்று தமிழகத்திலே பகுத்தறிவுப் பிரச்சாரத்திலே தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்” என்று கருணாநிதியால் புகழாரம் சூட்டப்பட்டவர் செல்வேந்திரன்.

செல்வேந்திரனை வாழ்த்தும் கருணாநிதி
செல்வேந்திரனை வாழ்த்தும் கருணாநிதி

அந்த அளவுக்கு கருணாநிதி செல்வேந்திரனுக்கு முக்கியம் கொடுத்து வைத்திருந்ததற்கு காரணம், அவர் திராவிட இயக்கத்தில் பெரியாரோடு அவ்வளவு நெருக்கமாக இருந்தவர் என்ற மரியாதைதான். திருச்சி உறையூர் நீலமேகம் - சிவகாமி, தம்பதியின் மகனான செல்வேந்திரன் நிலச்சுவான்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா, திருச்சி நகராட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். நீதிக்கட்சியில் பணியாற்றியவர் என்ற பின்புலம்தான், பின்னர் செல்வேந்திரனை பெரியார் கொள்கையுடன் இணைத்தது.

திருச்சி நேஷனல் கல்லூரியில் இன்டர்மீடியட் படிக்கும் காலத்திலேயே, பேச்சில் வல்லவராக இருந்தார் செல்வேந்திரன். ஆரம்பத்தில் கல்லூரி மேடைகளில் பேசி தனது பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டவர், அதன்பின் தனது ஏரியாவில் இருந்த திருவிக மன்றத்தில் நடந்த அரசியல், இலக்கியம் சார்ந்த விவாதங்கள், சொற்பொழிவுகளில் பங்கெடுத்து தன்னை மேலும் பட்டை தீட்டிக் கொண்டார். அந்தப் பேச்சுதான், அவரை கால ஓட்டத்தில் பெரியார், கருணாநிதி உள்ளிட்டவர்களோடு நெருக்கமாக்கியது.

திராவிட இயக்கத்தில் இருந்து கடவுள் மறுப்புக் கொள்கையை ஊர்தோறும் உரக்க முழங்கியதால், பெரியாருக்கும் நெருக்கமானார் செல்வேந்திரன். பெரியார் திருச்சியில் தங்கியிருந்த காலகட்டத்தில், அந்த நெருக்கம் இன்னும் அதிகமாகி, பெரியாரின் செல்லப்பிள்ளை போலானார். வீரமணியைவிட, செல்வேந்திரனுக்குத்தான் பெரியார் அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகக்கூட, அப்போது சொல்வார்கள். செல்வேந்திரனின் திருமணத்தை தலைமைதாங்கி நடத்தி வைத்ததே பெரியார்தான். மிசாவில் கைதாகி ஒருவருடத்துக்கும் மேலாக சிறைவாசம் செய்த அனுபவமும் செல்வேந்திரனுக்கு உண்டு.

திராவிட இயக்க வரலாற்றை முழுதுமாக அறிந்தவர் என்பதால், இவரளவுக்கு திராவிட இயக்க வரலாற்றை ஆதாரங்களுடன் யாராலும் பேச முடியாது. அதனால்தான் இவருக்கு ‘சொல்வேந்தர்’ என்ற பட்டமும் தரப்பட்டது. பெரியார் பெருந்தொண்டரான திருச்சி செல்வேந்திரன், 82 வயதைக் கடந்த நிலையில் இன்றும் வாழும் வரலாறாக திருச்சியில் வசித்து வருகிறார்.

திமுகவின் முக்கிய ஆளுமைகளுடன் செல்வேந்திரன்
திமுகவின் முக்கிய ஆளுமைகளுடன் செல்வேந்திரன்

பேராசியர் சபாபதி மோகன், பேராசிரியர் தெய்வசிகாமணி (பொன்முடி) ஆகியோர் உரைவீச்சில் நடக்கும் பட்டிமன்றங்களுக்கு செல்வேந்திரன்தான் நடுவராக இருப்பார். பெரியாருக்குப் பிறகும் அவர் அப்படி செல்வாக்குடன் வலம்வருவது, வீரமணிக்கு கசந்தது. மற்றவர்கள் எல்லாம் திமுகவுக்கு போனபோது இவர் போகவில்லை. பெரியாரின் கொள்கைகளோடே இருந்தார். ஆனாலும், திகவிலிருந்து அவர் விடைபெறும் காலமும் ஒருகட்டத்தில் வந்தது.

செல்வேந்திரனின் செல்வாக்கு அதிகமாகிக் கொண்டே போனதால், வீரமணியின் கசப்பும் அதிகமானது. ஒருகட்டத்தில், கழகக் கட்டுப்பாட்டை மீறிவிட்டார் என்று தி.க.வை விட்டு செல்வேந்திரனை நீக்குவதாக அறிவித்தார். அதனால் திருவாரூர் தங்கராசு, பெரியவர் ஆனைமுத்து ஆகியோரைப்போல தனியாக இயக்கம் தொடங்க விரும்பினார் செல்வேந்திரன். ஆனால் கருணாநிதி அதை விரும்பவில்லை. ‘’அதெல்லாம் வேண்டாய்யா, நீ இங்க வந்துடு, நான் பார்த்துக்கிறேன்” என்று திமுகவுக்கு அழைத்தார்.

ஆனாலும் செல்வேந்திரன் அதற்கு சம்மதிக்கவில்லை. தொடர்ந்து பேசிப்பேசி கரைய வைத்து, ஒருகட்டத்தில் கோ.சி.மணியை திருச்சிக்கே அனுப்பி, செல்வேந்திரனை சம்மதிக்க வைத்தார். 1986-ம் ஆண்டு, தஞ்சாவூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திமுகவில் இணைந்தார் செல்வேந்திரன். வேடனின் அம்பு பட்ட புறா காயத்துடன் சிபிச் சக்கரவர்த்தியின் மடியில் வந்து விழுந்த கதையை உதாரணம் காட்டி, செல்வேந்திரனை திமுகவுக்கு வரவேற்றார் கருணாநிதி.

செல்வேந்திரன்
செல்வேந்திரன்

அப்போது செல்வேந்திரனுக்கு வழங்கப்பட்ட உத்தரவாதம் “உனக்கு தகுதியான பதவி கிடைக்கும்யா” என்பதுதான். அந்த நேரத்தில் கருணாநிதியுடன் இருந்த நெருக்கம் காரணமாக, திருச்சி மாநகர் திமுக முழுதும் செல்வேந்திரன் ஆதரவாளர்களால் நிரம்பியிருந்தது.

பின்னாளில் திருச்சிக்கு வந்த நேரு, அதனால்தான் செல்வேந்திரனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். தன்னுடைய புத்திக்கூர்மையால் தன்னை நம்பிய நேருவை, திருச்சி மண்ணில் நிலைநிறுத்தினார் செல்வேந்திரன். அதற்குப்பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

செல்வேந்திரனின் திருமணத்தை பெரியார் நடத்திவைத்தபோது...
நேருவை நம்பியவர்கள் என்ன ஆனார்கள்? - 3
செல்வேந்திரனின் திருமணத்தை பெரியார் நடத்திவைத்தபோது...
நேருவை நம்பியவர்கள் என்ன ஆனார்கள்? - 3

Related Stories

No stories found.