`வன்னியர் சமூகத்துக்கு அன்புமணி செய்தது என்ன?`- காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை அதிரடி கேள்வி

குரு.விருதாம்பிகை
குரு.விருதாம்பிகை

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது வன்னிய சமுதாயத்திற்கு செய்த துரோகம் என்று கடுமையாக கொந்தளிக்கும் விருதாம்பிகை இதுகுறித்து காமதேனு இணையதள பிரிவிடம் விரிவாக பேசினார்.

``வன்னியர்களுக்கு பல துரோகங்களை ராமதாஸ் செய்துவிட்டு தற்போது தனது மகனை பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக ஆக்கி உள்ளார். அன்புமணியை தலைவர் ஆக்குவதை நான் எதிர்க்கவில்லை . ஆனால் அன்புமணி இந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எங்கள் வன்னியர் சமூகத்துக்கும் செய்தது என்ன என்ற ஒரே கேள்வியை மட்டும் கேட்கிறேன். அன்புமணி மத்திய அமைச்சர் ஆனபோது செய்த ஒரே காரியம், தனது அலுவலகத்திற்கு வெளியே கட்சிக்காரர் மற்றும் சாதிக்காரர்கள் என் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்று போர்டை வைத்தார். அப்படிப்பட்ட அன்புமணியை தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஆக்கியதால் வன்னிய சமூகத்திற்கு அவர் என்ன செய்யப் போகிறார்.

தந்தையுடன் விருதாம்பிகை
தந்தையுடன் விருதாம்பிகை

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக்க வன்னியர் உரிமைப் போரில் உயிர்நீத்த 25 குடும்பங்களில் ஒருவர் கூட இல்லையா ராமதாஸ் அவர்களே? வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்து உங்களை விட்டு போகக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தானே, உங்கள் மகனை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஆக்கியுள்ளீர்கள்.

இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் காடுவெட்டியார் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், வன்னியர் சமுதாயத்திற்கும் செய்த தியாகத்தை கூட இவர்கள் பேசவில்லை. வன்னியர் உரிமைப் போரில் உயிர்நீத்த 25 தியாகிகளை பற்றியும் பேசவில்லை. ஆனால் வன்னியர் குல சொந்தங்களை கட்சிப் பணி செய்யவில்லை என்று ராமதாஸ் கூறுகிறார். பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்கள் மற்ற கட்சியினர்போல் எதிர்பார்ப்பு இல்லாமல் சமுதாய நலன் கருதியே உழைத்தார்கள்.

ஆனால் நீங்கள் மாறி மாறி கூட்டணி வைப்பதால் தான் மக்கள் வாக்களிக்கவில்லை. அதை மறைத்துவிட்டு என் பாட்டாளி சொந்தங்களை குறை கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்னிய குல சொந்தங்கள், ராமதாசும், அன்புமணியும் யாருக்கானவர்கள் என்று இனியாவது சிந்தித்து செயல்பட வேண்டும். 2004-ம் ஆண்டு வரை அன்புமணி யாரென்று கூட பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கு தெரியாது. எனது தந்தை சொன்னால்தான் பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்கள் கேட்பார்கள் என்பதால் ராமதாஸ் என் தந்தையிடம் கேட்டுக்கொண்டதால் என் தந்தை சுயநலம் பார்க்காமல் கட்சியில் அன்புமணியை வளர்த்து விட்டார்.

ஆங்கில ஆட்சிக் காலத்திலும் சுதந்திர இந்தியாவிலும் யாருமே நான்கு முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதில்லை. ஆனால் என் தந்தை கைது செய்யப்பட்டார். இந்த நிலையிலும் என் தந்தை வன்னியர் மக்களுக்காக உயிரையும் கொடுக்க துணிந்தார்.

அதுமட்டுமல்லாமல் கட்சி நலனுக்காக ஊர் ஊராக சென்று பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்து வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு நிதியை திரட்டி வன்னியர் நலனை பாதுகாத்தார். ஆனால் ராமதாஸ், எனது தந்தை இறப்பிற்கு பிறகு வன்னியர் கல்வி அறக்கட்டளையை தனது குடும்ப சொத்தாக டாக்டர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று மாற்றிக்கொண்டார். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக தனியாக நிற்க வேண்டும் என்று என் தந்தைதான் வலியுறுத்தினார்.

அப்பொழுது தனது மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக நீதான் அறிவிக்க வேண்டும், அப்போதுதான் நம் சொந்தங்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று ராமதாஸ் என் தந்தையிடம் வேண்டினார். அதையேற்று தான்தான் கட்சியில் சீனியர் என்பதை பொருட்படுத்தாமல் கட்சி வளர வேண்டும், வன்னியர் சமூக நலனே முக்கியம் என்ற ஒரே நோக்கத்திற்காக அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க என் தந்தை ஒத்துக்கொண்டார்.

அந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்று 6 சதவீத வாக்குகளை பெற்றது. அதன் பிறகு வந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் என் தந்தை இறந்தபிறகு அவர்களால் தனித்து நிற்க திராணி இல்லை. காரணம் இவர்களுக்கு ஓட்டு கேட்க என் தந்தை உயிரோடு இல்லை. மேலும் என் தந்தைக்கு இவர்கள் செய்த துரோகம் எங்கள் வன்னியர் மக்களுக்கு தெரிந்துவிட்டது.

அந்த தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து 6 சதவீத வாக்கை 4.5 சதவீதமாக இழந்தனர். பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் அதே கூட்டணியில் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை 3.8 ஆக இழந்தனர். பிறகு நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 2 சதவீதத்திற்கும் கீழ் சென்றுவிட்டனர்.

இவ்வாறு இவர்கள் வீழ்ச்சி அடைய காரணம் என் தந்தை காடுவெட்டி ஜெ. குருவுக்கும், வன்னிய மக்களுக்கும் செய்த துரோகங்களை மக்கள் புரிந்து கொண்டதுதான். இவர்களை வன்னியர் மக்கள் புறக்கணித்து விட்டார்கள். இப்போது அடுத்த துரோகமாக தன்னுடைய மகனை கட்சியின் தலைவர் ஆக்கியிருக்கிறார் ராமதாஸ். இதற்கும் வன்னிய மக்கள் தகுந்த பதிலைத் தருவார்கள்" என்று பேசி முடித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in