'பிரதமர்’ ஸ்டாலினும், பிஹார் தொழிலாளர்களும்!

அரசியலுக்கு இரையான தமிழர் - வடவர் விவகாரம்
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

பிஹார் தொழிலாளர்களை முன்னிறுத்தி தமிழகத்திலும், தமிழ்நாட்டுக்கு எதிராக வடக்கிலும் மேற்கொள்ளப்படும் விஷமப் பிரச்சாரத்தின் பின்னணியில் அரசியல் விவகாரங்கள் அம்பலப்பட்டு நிற்கின்றன.

கடந்த சில தினங்களாக, பிஹார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து தமிழகத்தில் தாக்குதல் நடப்பதாக, இந்தி பேசும் மாநிலங்களில் பீதி கிளம்பியது. பிஹாரை சேர்ந்த 12 தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாகவும், அங்கத்திய சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்கள் மத்தியில் புரளி பரவியது. ஹோலி பண்டிகையை கொண்டாட ரிட்டர்ன் டிக்கெட்டோடு சென்னை சென்ட்ரலில் ரயிலுக்கு காத்திருந்தவர்களை வளைத்து வீடியோ எடுத்து, ’உயிருக்கு பயந்து தமிழகத்திலிருந்து தப்பியோடும் புலம்பெயர் தொழிலாளர்கள்’ என்று பதற்றம் கிளப்பினார்கள்.

சென்னையில் வட இந்திய தொழிலாளர்கள்
சென்னையில் வட இந்திய தொழிலாளர்கள்

பிஹார் மற்றும் ஜார்கண்ட் பின்னணியிலான வட இந்தியர்கள் இடையிலான குழு மோதல் மற்றும் கொலை சம்பவம் ஒன்றின் வீடியோவை பகிர்ந்து, தமிழர்களின் கொலைவெறி ஆட்டம் என்றார்கள். ராஜஸ்தானில் நிகழ்ந்த பழைய கொலைச் சம்பவ வீடியோ ஒன்றையும் பகிர்ந்து தமிழகத்தில் நிகழ்ந்ததாக பீதி பரப்பினார்கள். மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறோம் என்ற பெயரில் அங்கத்திய வெகுஜன ஊடகங்களும், வடக்குக்கு எதிரான தமிழர்களின் தலைமுறை தாண்டிய இந்தி எதிர்ப்பு போராட்டங்களை எல்லாம் மீண்டும் தோண்டி பரிமாறின.

தமிழர்களின் பணி வாய்ப்புக்கு அச்சுறுத்தல் என்று, வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிராக சீமான், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக அரசியல் புள்ளிகள் வெகுகாலமாக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அண்மையில் அப்படியான சர்ச்சைகளை அடுத்து, ஓடும் ரயில் வட இந்திய தொழிலாளர்களை வசை பாடியதாக தமிழ்நாட்டை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதற்கு அப்பால் பெரிதாக வட இந்தியர்களுக்கு எதிரான தமிழக தகராறுகள் பெரிதாக வெளிப்படவில்லை.

ஆனால் தமிழகத்தில் வட இந்தியர்கள் கொல்லப்படுவதாக பெரும் பீதி, பிஹார் மாநிலத்தை மையமாகக் கொண்டு திடீரென கிளம்பியது. இதன் பின்னணியில், தமிழக முதல்வர் ஸ்டாலினை மையமிட்ட அரசியல் காரணங்கள் தாமதமாகவே வெளிப்பட்டன. எப்போது இந்த பதற்றம் வேகமெடுத்தது, எவர் மும்முரமாக விஷமம் பரப்பினர்.. என்பதைப் பொறுத்தும் ஸ்டாலினை மையமிட்ட அரசியல் களேபரத்தை அடையாளம் காணலாம்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில்
மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில்

தமிழக முதல்வர் பிறந்தநாளுக்கு வருகை தந்து நேரில் வாழ்த்தியவர்களில் பிஹார் துணைமுதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் முக்கியமானவர்கள். பிறந்தநாள் பாராட்டின் முகமாக காஷ்மீர் முன்னாள் முதல்வரான ஃபரூக் அப்துல்லா, ’ஸ்டாலின் பிரதமராவதில் என்ன தவறு?’ என்றொரு விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

மு.க.ஸ்டாலின் - தேஜஸ்வி யாதவ்
மு.க.ஸ்டாலின் - தேஜஸ்வி யாதவ்

இது தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே ’திராவிட மாடல்’ என்ற பேனரில் சிம்ம சொப்பனமாக வளர்ந்து வரும் திமுக தரப்பிலிருந்து, பிரதமர் முகம் முன்னிறுத்தப்படுவதை பேச்சளவில் கூட பாஜகவால் ஏற்க முடியவில்லை. காங்கிரஸ் எழவே முடியாதபடிக்கு வீழ்ந்திருக்கையில், அம்மாதிரி பிரதமர் கனவுகளை எதிரொலித்த டெல்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், தெலங்கானா மாநிலங்களுக்கு பிரத்யேக அதிர்ச்சி வைத்தியங்களை தவணை முறையில் தந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஸ்டாலினின் ’பிரதமர்’ விவாதத்தை முளையிலேயே கிள்ள பல்வேறு முயற்சிகள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று பிஹார் தொழிலாளர்களை மையமிட்டதாக வலிய சிக்கியது. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவுக்கு தேஜஸ்வி யாதவ் வந்து சென்ற வேகத்தில், அவர் பிஹார் மாநில எதிர்க்கட்சியினரான பாஜகவினரின் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதாயிற்று. ’பிஹார் தொழிலாளர்கள் தாக்கப்படும் தமிழகத்தில், அதைப் பற்றிய கவலையின்றி பிறந்தநாள் கேக் சாப்பிட்டு திரும்பியிருக்கிறார் தேஜஸ்வி’ என்று தாக்கினார்கள். கையோடு அவர்கள் பரப்பிய சில களேபர வீடியோ காட்சிகள், சமூக ஊடகங்கள் வாயிலாக பிஹார் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியன. பிஹார் சட்டசபையிலும் அவை அமளியை கிளப்பின.

நெடுங்காலமாக தமிழ்நாட்டில் நிலவும் 2 வகையிலான நிதர்சன போக்குகளை பிரதிபலிக்கும் வீடியோக்களுடன், இம்மாதிரியான புரளி வீடியோக்கள் கவனமாக கலந்து பரப்பப்பட்டன. முதல் நிதர்சனம், நெடுங்காலமாக தமிழகத்தில் நீடிக்கும் இந்தி எதிர்ப்புணர்வு. முக்கியமாக திமுக மற்றும் அதன் ஆதரவு அரசியல் கட்சிகளின் பல்வேறு தருணங்களிலான சீற்றங்களின் பதிவுகள் இந்த வீடியோக்களில் கோக்கப்பட்டன.

இரண்டாவது நிதர்சனம், தமிழகத்தின் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் அதிகரிக்கும் வட இந்திய பணியாளர்களுக்கு எதிரானது. தமிழ் மக்கள் சேவைக்கான அரசு அலுவலகங்களில் ஆக்கிரமித்திருந்த, தமிழே அறிந்திராத வட இந்தியர்களால் தமிழக மக்கள் எரிச்சலடைந்தனர். இத்தோடு தமிழர்களின் அரசுப் பணிக்கான வாய்ப்புகளை அபகரிக்கும் வகையில், திட்டமிட்டு வட இந்திய பணியாளர்கள் தமிழ்நாட்டில் பணி அமர்த்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த 2 விவகாரங்களில் மாநில மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த தமிழக அரசியல் தலைவர்களின் குரல்கள், வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிரான தற்போதைய புரளிகளை புனைய பயன்படுத்தப்பட்டன. ’இந்தி தெரியாது போடா’ என்பது முதல் தமிழ்நாட்டின் அரசுப் பணியிடங்களில் திட்டமிட்டு வட இந்தியர்களை திணிப்பதற்கான எதிர்ப்புகள் வரை முழங்கிய, தமிழக அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வீடியோ பதிவுகள் சுற்றுக்கு விடப்பட்டன. இவை அனைத்துமே, வட இந்தியர்கள் மீதான தற்போதைய தாக்குதலுக்கானவை என்பதாக திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்யப்பட்டன. பிஹார் மாநில பாஜகவும் அதன் நிர்வாகிகளும் இந்த புரளிகளை திட்டமிட்டு பரப்பினர். அவற்றை பின்னர் தமிழக பாஜகவினர் பலரும் எதிரொலிக்க ஆரம்பித்தனர்.

புரளி செய்திகள்
புரளி செய்திகள்

ஒட்டுமொத்தமாய் எல்லோரும் சேர்ந்து, ‘ஸ்டாலின் பிரதமராவாரா, பாஜகவுக்கு எதிரான முகாமின் பிரதமர் வேட்பாளாரை தீர்மானிப்பாரா..?’ என்றெல்லாம் எழுந்த விவாதங்களை அமுக்கின. கூடவே தமிழ்நாடு, மாநில மக்கள், ஆட்சியாளர்கள் என சகல தரப்பினரையும் களங்கம் செய்தன. ’வதந்தி பரப்புவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக காவல்துறை சாட்டை சொடுக்கிய பிறகே அவை ஒருவாறாக அடங்கின. தமிழகத்தில் அடக்கி வாசித்தாலும், வட இந்தியர்கள் மத்தியில் இன்னமும் அவை கொளுந்துவிட்டு எரிகின்றன. இவை அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக மாறக்கூடும் என்ற கவலையையும் உருவாக்கி உள்ளன.

தமிழக - வடவர் இடையிலான தொழிலாளர் பிரச்சினையை நடைமுறை சார்ந்து ஆராய முன்வராது, அவற்றை மலிவான அரசியலாக்கியதில் பிராந்திய உணர்வுகளுக்கே முக்கியத்துவம் தரும் தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றின் போக்கில் தேசியக் கட்சியான பாஜகவும் பொறுப்பிழந்து போனது. ஆனால், ’பிரதமர்’ ஸ்டாலினுக்கான விவாதங்களை முற்றிலும் முடக்கியதில், அரசியல் சதுரங்கத்தில் பாஜக ஜெயிக்கவும் செய்திருக்கிது.

பாஜகவுக்கு எதிரான உபி மற்றும் பிஹார் கட்சிகளுடன் திமுக ஒருங்கிணையும் முயற்சிக்கு, அதன் வேரிலேயே வெந்நீர் பாய்ச்சும் முயற்சி வெற்றி கண்டிருக்கிறது. மேலும், பிஹார் பாஜக தொடங்கிவைத்த இந்த விஷம பிரச்சாரம் வரும் நாட்களிலும் தொடர்ந்தால், பாஜகவை எதிர்க்கும் வட மாநில கட்சிகள் தங்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திமுகவிடமிருந்து இனி தள்ளியே நிற்கும். மு.க.ஸ்டாலின் ஏன் ‘பிரதமர்’ ஆகக்கூடாது என்றெல்லாம் ஒரு பேச்சுக்குக்கூட அவர்கள் இனி வாய் திறக்கவும் மாட்டார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in