'கொக்கரக்கோ' பாரில் 300 ரூபாய்க்கு விற்கப்படும் பீரு!: வீடியோவை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் கண்டனம்

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்'கொக்கரக்கோ' பாரில் 300 ரூபாய்க்கு விற்கப்படும் பீரு!: வீடியோவை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் கண்டனம்

பல்லடத்தில் உள்ள 'கொக்கரக்கோ’ என்ற பாருடன் கூடிய உணவகத்தில் 160 ரூபாய் பீர் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக மாணவர் அணி திமுக அமைப்பாளரே தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதன் மூலம் பாரில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," 'என்ன உலகமடா, இது ஏழைக்கு நரகமடா, தன்னலப் பேய்களுக்கு இது தங்கச் சுரங்கமடா' என்றார் பேரறிஞர் அண்ணா. ஆம், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக குடும்ப ஆட்சி ஏழைகளுக்கு நரகமாக இல்லை, எமனாக இருந்து கொண்டிருக்கிறது.

அதே சமயத்தில் ஆட்சியாளர்களுக்கு தங்கச்சுரங்கமாக இருந்துகொண்டிருக்கிறது. கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ்க்குடி நாகரிகத்தை உலகிற்கு தந்தது. கடல் தாண்டிச் சென்று வணிகம் மூலம் வரலாறு படைத்த குடி தமிழ்க்குடி. எட்டுத் திசைகளிலும் படை நடத்தி வெற்றிக்கொடி நாட்டிய குடி தமிழ்க்குடி. வீரத்தின் விளைநிலமாக விளங்கிய தமிழர்களை, மானத்தை உயிரினும் மேலாகக் கருதிய தமிழர்களை சாராய சாம்ராஜ்யத்தின் மூலம் அழித்து வரும் அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

திமுகவில் நடக்கும் ஊழல் குறித்து அமைச்சர் பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்து, திமுகவினர் கருத்து தெரிவிக்காத நிலையில், டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதும், இவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அமைச்சர் தெரிவித்து இருப்பதைச் சுட்டிக்காட்டினால், இந்தப் பணம் அவர்களுக்குத்தான் செல்கிறது என்றும், அவர்கள்தான் ஒவ்வொரு கடையாக வந்து வாங்கிச் செல்கிறார்கள் என்று கடையில் உள்ள விற்பனையாளர் தெரிவிப்பதும் போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இரு ஒருபுறம் என்றால், மறுபுறம் பல்லடத்தில் உள்ள 'கொக்கரக்கோ’ என்கிற பாருடன் கூடிய உணவகத்தில் 160 ரூபாய் பீர் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதுகுறித்து தட்டிக் கேட்டால் அனைத்து மட்டத்திலும் பணம் கொடுப்பதாகத் தெரிவித்து மிரட்டுவதாகவும் பல்லடம் மாணவர் அணி திமுக அமைப்பாளரே தெரிவிக்கிறார்.

இதுகுறித்து திமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பிய ஆடியோ சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வைரலாக பரவி வருகிறது.

இதுறித்து உணவகத்தின் உரிமையாளர் தெரிவிக்கையில், முறையாக உரிமம் பெற்று பார் நடத்துவதாகவும், கோவையில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்வதாகவும், இவ்வளவு விலைக்குதான் விற்க வேண்டும் என்று தங்களிடம் யாரும் கூறவில்லை என்றும் கூறியிருக்கிறார். உரிமையாளரின் பேச்சிலிருந்து, பாரில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

எந்தப் பொருளாக இருந்தாலும், அதனுடைய விலை அதிகபட்ச விலைக்கு (Maximum Retail Price) உட்பட்டுதான் இருக்க வேண்டும் என்பது சட்டம். இதனைமீறி அதிக விலைக்கு விற்றால் அது குற்றம். இந்தக் குற்றச் செயலை மேற்படி கடை நிர்வாகம் செய்துள்ளது. இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் எத்தனை பார்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.

இந்தக் கூடுதல் வருமானம் யாருக்கு செல்கிறது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. இந்த கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சருக்கு உண்டு. ஆனால், அவர் மௌனம் சாதிக்கிறார். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்றுதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில், தஞ்சாவூர் வெள்ளைப் பிள்ளையார் கோயில் அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை ஒட்டியிருக்கும் மது அருந்தும் மையத்தில் காலை 11 மணிக்கு மது அருந்திய குப்புசாமி மற்றும் குட்டி விவேக் ஆகியோர் மதுபான கடைக்கு எதிரிலேயே மயங்கி விழுந்ததையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தச் செய்தி ஆற்றொணாத் துயரத்தையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் வேதனைப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், மது குடித்து இறந்தவர்களின் உடல்களை ஆய்வு செய்ததில் அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு விஷம் கலந்திருப்பதுதான். கள்ளச் சாராய கலாச்சாரத்தை, விஷச் சாராய விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றிருக்கிற நிலையில், அரசே சயனைடு கலந்து மதுவை விற்பனை செய்வது என்பது மக்களை அழித்தொழிக்கும் செயல். மொத்தத்தில், டாஸ்மாக்கில் மிகப் பெரிய குளறுபடி, மிகப் பெரிய ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

தமிழக மக்களை அழிப்பதற்குப் பெயர்தான் 'திராவிட மாடல்' ஆட்சி போலும். தமிழ்க் குடியை கெடுக்க வந்த திமுக அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தின் வருவாய் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

இது வழிப்பறிக் கொள்ளைக்கு சமம்.நீதி தவறி ஆட்சி நடத்தும் மன்னன், மக்களையும், பொருளையும் ஒரு சேர இழப்பான் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, விபரீத ஆட்சி வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது, மக்களை சுரண்டாமல், மடைமாற்றி விடும் பணியை செய்யாமல் மக்கள் பணியாற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்வர வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in