`நானும் பீஃப் பிரியாணி சாப்பிடுபவன்'- சென்னை உணவுத் திருவிழாவில் 3 கடைகளுக்கு அனுமதி வழங்கியதாக அமைச்சர் தகவல்

`நானும் பீஃப் பிரியாணி சாப்பிடுபவன்'- சென்னை உணவுத் திருவிழாவில் 3 கடைகளுக்கு அனுமதி வழங்கியதாக அமைச்சர் தகவல்

சென்னை உணவு திருவிழாவில் பீஃப் பிரியாணி அரங்கு அமைக்கப்படாதது சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில், மூன்று பீஃப் கடைகளுக்கு சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் உணவு திருவிழாவை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் மொத்தம் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து நடத்தும் இந்த திருவிழாவில், நிறைவு நாளில் விழிப்புணர்வு நடைப்பயணமும் நடைபெறவுள்ளது. ‘சிங்கார சென்னை உணவுத் திருவிழா 2022’ கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கி இருக்கும் என்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சமையல் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் ராகி புட்டு, ராகி தோசை, முடக்கத்தான் தோசை, பிரண்டை தோசை, குதிரைவாலி, சாமை, திணை உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்பட்ட உணவுகள் என வரை பல்வேறு விதமான பாரம்பரியமான உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என வகைவகையான அசைவ உணவுகளும் வரிசைகட்டி நின்றன. மொத்தமாக அமைக்கப்பட்டுள்ள 150 அரங்குகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டி கடலை மிட்டாய், திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட அனைத்து பிரபலமான உணவுப்பொருட்களும் இங்குக் கிடைக்கும். அதுமட்டுமின்றி திருவிழாவில் குழந்தைகள் தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உணவுப் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

நேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர் மாசுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பீஃப் பிரியாணிக்கு அரங்கு அமைக்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பீஃப் பிரியாணி அரங்கு அமைப்பதற்கு யாரும் அனுமதி கோரவில்லை என்பதால் அதற்கான அரங்கு அமைக்கப்படவில்லை. நானும் பீஃப் பிரியாணி சாப்பிடுபவன் தான் என விளக்கம் தெரிவித்தார். பீஃப் பிரியாணி அரங்கு அமைக்கப்படாதது சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில் சென்னை உணவுத் திருவிழாவில் மூன்று பீஃப் கடைகளுக்கு சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in