வாரி சுருட்டிய நோயால் படுத்த படுக்கையாக கிடக்கும் பி.டெக் பட்டதாரி: நேசக்கரம் நீட்டிய நாகர்கோவில் மேயர்

சேதுபதி.
சேதுபதி.

நாகர்கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருக்கும் பி.டெக் பட்டதாரியின் குடும்பம் மிக ஏழ்மையான நிலையில் தவித்துவந்தது. அந்தக் குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல்கூறிய நாகர்கோவில் மேயர் மகேஷ், அந்த இளைஞரின் மேல்சிகிச்சைக்கும் நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேதுபதி (பழைய படம் ).
சேதுபதி (பழைய படம் ).

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் டெரிக் சந்திப்பு அருகில் உள்ள சற்ணம் வீதியில் ஜெயபால் சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகளுக்கு திருமணம் முடிந்து கணவர் வீட்டில் வசிக்கிறார். தனது மகன் சேதுபதியை கல்விக்கடன் பெற்று படிக்க வைத்துள்ளார் கட்டுமான தொழிலாளியான ஜெயபால்.

வெளியூரில் கிடைத்த பத்தாயிரத்தைவிட உள்ளுரில் கிடைக்கும் ஆறாயிரம் ரூபாய் சம்பளமே மேல் என நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார் சேதுபதி. இஎஸ்ஐ பிடித்தம் கைசெலவுக்கு என ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு மீதியை தன் அம்மாவிடம் ஒப்படைத்து குடும்பத்துக்கும் உறுதுணையாக இருந்துவந்தார் சேதுபதி.

2020 ஜனவரி 2-ம் தேதி, பணியிடத்தில் மயங்கி விழுந்த சேதுபதியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பின் நாகர்கோவிலில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்துவிட்டு , உயர்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல பரிந்துரைத்தனர்.

அங்கு 2 லட்சம் ரூபாய்கட்டி சிகிச்சை பெற முடியாத நிலையில் இஎஸ்ஐ இணைப்பில் உள்ள குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆக்சிஜன் கொடுத்து சில நாட்களும், பின்னர் கழுத்தில் துளையிட்டு குழாய் மூலம் உணவும், மருந்தும் சேதுவுக்கு கொடுக்கப்பட்டது.

ஆனாலும், நாளுக்குநாள் உடல்நிலை மோசமான நிலையில் சேது உள்ளார்.. அதேகாலக்கட்டத்தில் கரோனா பெருந்தொற்றினால் பொதுமுடக்கமும் சேர்ந்து கொள்ள மகனுடன் ஊர் திருப்பினர் அந்த ஏழை பெற்றோர்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி, கோட்டார் ஆயர்வேத மருத்துவக்கல்லூரி என பார்த்துவிட்டு தற்போது வீட்டில் வைத்து நாட்டு வைத்தியம் பார்த்து வருகின்றனர். ஆறு மாதங்களில் மட்டும் நாட்டு வைத்தியருக்கு ரூ.62 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சிகிச்சையளித்ததில் இப்போது சிறுநீர் வெளியேற்றவும், மூச்சுவிடவும் குழாய் தேவைப்படவில்லை. உணவை நேரடியாகவே ஊட்ட முடிகிறது என ஆறுதல்படுகின்றனர் சேதுவின் பெற்றோர்.

தொடர்ந்து மூளை மற்றம் நரம்பியல் சிகிச்சை அளித்தால் தனது மகனை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை ததும்பச் சொல்கிறார் சேதுவின் தாய் சாந்தா. சொந்தமாக கட்டிய வீட்டையும் விற்று மகனுக்காக செலவு செய்துவிட்டு நிர்க்கதியாக இந்த குடும்பம் நிற்கிறது. இந்தக் குடும்பத்தினைப் பற்றிய தகவலும், பி.டெக் பட்டதாரியான சேதுவின் சமீபத்திய தோற்றமும் சமூகவலைதளங்களில் வைரலானது.

சேதுவின் இல்லத்திற்குப் போன மேயர் மகேஷ்
சேதுவின் இல்லத்திற்குப் போன மேயர் மகேஷ்

இதுகுறித்துத் தகவல்கள் தெரிய வந்ததும் நாகர்கோவில் மாநகர மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான மகேஷ், சேதுபதியின் இல்லத்திற்குச் சென்றார். அப்போது சேதுவின் குடும்பத்திற்கு நிதி உதவியும் கொடுத்தார். தொடர்ந்து அந்த ஏழை பி.டெக் பட்டதாரி வாலிபர் சேதுவின் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், நரம்பியல் துறை மருத்துவர்களையும் தொடர்புகொண்டு பேசி அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே உயர் சிகிச்சைக் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். இந்தச் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in