‘இந்தியாவுக்கான போர், மாநிலத் தேர்தல்களில் அல்ல, 2024 தேர்தலில்தான் நிகழும்!’

பிரதமர் மோடியின் பெருமிதப் பேச்சுக்குப் பிரசாந்த் கிஷோர் பதிலடி
‘இந்தியாவுக்கான போர், மாநிலத் தேர்தல்களில் அல்ல, 2024 தேர்தலில்தான் நிகழும்!’

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா என 4 மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது பாஜக. பஞ்சாபில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்திருப்பதும் ஒருவகையில் பாஜகவின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியிருக்கிறது. எதிர்காலத்தில் பஞ்சாபிலும் பாஜக வெற்றி பெறும் எனப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

டெல்லியில் நேற்று நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக நிர்வாகிகளிடம் பேசிய அவர், “எல்லை மாநிலமாக இருப்பதால், பிரிவினைவாத அரசியலில் இருந்து பஞ்சாபை விழிப்புடன் வைத்திருக்கும் பணியை பாஜகவினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்து செய்துவருகின்றனர். வரும் ஐந்தாண்டுகளில், பாஜகவின் ஒவ்வொரு தொழிலாளியும் இந்தப் பொறுப்பை மிகுந்த ஆர்வத்துடன் நிறைவேற்றப்போகிறார்கள்” என்றும் குறிப்பிட்டார். பஞ்சாபில் பாஜக பலம் பெற்று வருவதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

மிக முக்கியமாக, உத்தர பிரதேசத் தேர்தலில் கிடைத்திருக்கும் வெற்றி மோடிக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்திருக்கிறது. 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மக்களவைத் தேர்தலில் முக்கியத்துவம் கொண்டது என்பதால், அடுத்த தேர்தலிலும் பாஜக வெல்லும் எனும் நம்பிக்கை பாஜகவினரிடையே பலம் பெற்றிருக்கிறது.

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டத்தைக் கொடுத்திருக்கின்றன என்று மோடி பேசியிருப்பது அந்த நம்பிக்கையில்தான். “2017 உத்தர பிரதேசத் தேர்தல் முடிவுகள் வந்ததும், 2019 மக்களவைத் தேர்தலின் விதி தீர்மானிக்கப்பட்டுவிட்டதாகப் பலரும் கூறினர். அது இப்போதும் பொருந்தும் என்றே நான் சொல்வேன். 2024 மக்களவைத் தேர்தலின் முடிவு 2022 உத்தர பிரதேசத் தேர்தல் முடிவுகளிலேயே தென்படுகிறது” என்று மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்குப் பதிலடி தந்திருக்கிறார் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.

இதுதொடர்பாக ட்வீட் செய்திருக்கும் அவர், “இந்தியாவுக்கான போர் 2024-ல் நடந்து, முடிவுகள் தீர்மானிக்கப்படுமே தவிர, மாநிலத் தேர்தல்களில் அல்ல. சாஹேபுக்கு (பிரதமர் மோடி) இது தெரியும்! அதனால்தான், மாநிலத் தேர்தல் முடிவுகளை வைத்து கவனச் சிதைவை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் மத்தியில் தீர்க்கமான உளவியல் பாதிப்பை ஏற்படுத்த புத்திசாலித்தனமாக முயற்சிக்கிறார். இந்தத் தவறான சித்தரிப்புக்குப் பலியாகவோ அல்லது பங்கேற்கவோ வேண்டாம்” என்று சற்று காட்டமாகவே கூறியிருக்கிறார்.

ஜனவரி மாதம் என்டிடிவி சேனலுக்கு அளித்திருந்த பேட்டியிலும் இதே கருத்தை பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். “இந்தச் சுற்றில் பாஜக வெல்ல வாய்ப்பிருந்தாலும், 2024 தேர்தலில் அது தோற்க வாய்ப்பிருக்கிறது. 2012-ல் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வென்றது. உத்தராகண்டில் காங்கிரஸ், மணிப்பூரில் காங்கிரஸ், பஞ்சாபில் அகாலிதளம் வென்றன. எனினும், 2014 மக்களவைத் தேர்தல் முடிவு வேறு மாதிரி இருந்தது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

2014 மக்களவைத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு வியூகம் அமைத்துத் தந்த பிரசாந்த் கிஷோர், அதன் பின்னர் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எனப் பல்வேறு கட்சிகளுக்குத் தேர்தல் வியூகம் அமைத்துத் தந்து வெற்றி தேடித்தந்தவர்.

பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து, பிஹாரில் அமைச்சருக்கு நிகரான பொறுப்பில் இருந்தவர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்துப் பேசியதால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். காங்கிரஸில் சேர முயற்சித்தவர், அதில் கட்சித் தலைமை அதிக ஆர்வம் காட்டாததால் அந்த முயற்சியைக் கைவிட்டார். அதேசமயம், காங்கிரஸ், பாஜக என எந்தக் கட்சியாக இருந்தாலும் அவற்றின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்துவிடுவார்.

“மோடியைக்கூட மக்கள் தூக்கி எறிந்துவிடலாம் ஆனால், பாஜக எங்கும் சென்றுவிடாது. எப்படி காங்கிரஸ் 40 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்ததோ அதேபோல் பாஜக இருக்கும்” என்று கடந்த அக்டோபர் மாதம் கோவாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பிரசாந்த் கிஷோர் பேசியிருந்தார். அது காங்கிரஸ் தரப்பைக் கடுப்பாக்கியது.

தற்போது, சமீபத்திய தேர்தல் முடிவுகளால் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கும் பாஜகவினருக்கு, பிரசாந்தின் வார்த்தைகள் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன.

Related Stories

No stories found.