பாஜக-காங்கிரஸ் இடையே மல்லுக்கட்டு... ம.பி, சத்தீஸ்கரில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்!

பாஜக - காங்கிரஸ் கட்சிக் கொடிகள்
பாஜக - காங்கிரஸ் கட்சிக் கொடிகள்

மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நவம்பர் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இன்று மாலையுடன் இம்மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் ஓய்கின்றன.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை வெளியிட்டது. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மோடி - ராகுல் காந்தி
மோடி - ராகுல் காந்தி

சத்தீஸ்கரில் 7 ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில் 17ம் தேதி 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதேபோல், மத்திய பிரதேசத்திலும் நவம்பர் 17ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 2 மாநிலங்களிலுமே காங்கிரஸ் - பாஜக ஆகிய 2 கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதில் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆளும் கட்சியாகவும், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆளும் கட்சியாகவும் இருந்து வருகிறது. ஒரே மாநிலமாக இருந்த மத்திய பிரதேசமும், சத்தீஸ்கரும் கடந்த 2000 வது ஆண்டு தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அன்றிலிருந்தே 2 மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பாஜக ஆட்சி மத்திய பிரதேசத்தில் மட்டுமே நடக்கிறது. எனவே இங்கு வெற்றிபெற மற்ற மாநிலங்களை விட இங்கு காங்கிரஸ் அதிகளவில் முயற்சித்து வருகிறது.

பாஜக காங்கிரஸ்
பாஜக காங்கிரஸ்

அதேபோல், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒருசில மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. எனவே இதையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால், மத்திய பிரதேசத்தில் ஜோதி ஆதித்யா சிந்தியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் உட்கட்சிப்பூசல் காரணமாக பதவி விலகியதால் ஆட்சி கவிழ்ந்து மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது.

இந்த மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே பிரதமர் நரேந்திர மோடி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, அமித்ஷா, பிரியங்கா காந்தி, ஜேபி நட்டா உள்ளிட்டோர் அந்தந்த மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை அடுத்து இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in