விளம்பர மோகத்தில் திளைக்கிறார்: ஸ்டாலின் மீது ஈபிஎஸ் காட்டம்

விளம்பர மோகத்தில் திளைக்கிறார்: ஸ்டாலின் மீது ஈபிஎஸ் காட்டம்

குற்றங்களைத் தடுப்பதில் ஆர்வம் காட்டாமல், விளம்பர மோகத்தில் திளைத்திருக்கிறார் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டைக் கடந்த 15 மாதங்களில் நான் பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறேன். ஆனால், குற்றங்களைத் தடுப்பதில் நிர்வாகத் திறமையற்ற இந்த முதலமைச்சர் ஆர்வம் காட்டாமல், விளம்பர மோகத்தில் திளைத்திருக்கிறார். இதனால் இன்று தமிழ்நாடு கொலைக்களமாக மாறிவருவதைக் கண்டு மக்கள் வீதியில் உறைந்துபோயிருக்கின்றனர்.

முதலமைச்சர் நேரடிப் பார்வையில் இயங்கும் காவல்துறை செயலிழந்து கிடப்பது வெட்கக்கேடானது. கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இது மக்களைக் குலைநடுங்கச் செய்திருக்கிறது. இந்தக் கொலைகள் அனைத்தும் ஏதோ எதிர்பாராதவிதத்தில் நடந்ததாகத் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் இந்தக் கொலைகள் நடந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார்.

மேலும், சட்டம், ஒழுங்கை நேரடியாக கவனித்துவருகிறேன்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? இதன் காரணமாக மக்கள் கொந்தளித்துப்போயிருக்கின்றனர். இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்குக் காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு ஈடு இணையாகச் செயல்பட்ட காலம் மாறி, இன்று சட்டம், ஒழுங்கைக் கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் செய்வதறியாமல், திறமையற்ற காவல்துறையாக மாறி நிற்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. சமுதாயச் சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தி தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in