மக்களவையில் விவாதங்கள் மற்றும் கேள்விகள் கிளப்பியதில்... தமிழக எம்பிக்களின் ஸ்கோர்கார்டு இதுதான்!

மக்களவை கூட்டம்
மக்களவை கூட்டம்

விடைபெறும் மக்களவையின் தமிழக எம்பிக்களில், கேள்விகளால் வேள்வி செய்தது மற்றும் அதிக எண்ணிக்கையிலான விவாதங்களில் பங்கேற்றது ஆகியவற்றை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இங்கே பார்ப்போம்.

விடைபெறும் 17வது மக்களவையின் எம்பிக்களில், தமிழகத்தின் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே போட்டியிட்டு வென்றுள்ளனர். தேனி தொகுதியில் மட்டும் அப்போதைய அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.ரவிந்திரநாத் குமார் மட்டுமே வென்றார். அவருக்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியில் பங்கேற்று, திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் வென்ற ஐஜேகே கட்சியின் நிறுவனர் டி.ஆ.பாரிவேந்தர், அந்த வகையில் திமுக உறுப்பினராகவே அடையாளம் காணப்பட்டார். ஆனபோதும் தனது பாஜக ஆதரவு நிலைப்பாடு காரணமாக மக்களவை செயல்பாடுகளில் தனி ஆவர்த்தனம் செய்தார்.

தமிழக எம்பிக்கள்
தமிழக எம்பிக்கள்

இந்த வகையில் தமிழகத்திலிருந்து சென்ற 39 எம்பிக்களில், 37 பேர் எதிர்க்கட்சி வரிசையில் அலங்கரித்தனர்; ஆளும் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களமாடினார்கள். இவர்களில் திமுகவின் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, தமிழச்சி தங்க பாண்டியன்; காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம் போன்றவர்களும், விசிக தொல்.திருமாவளவன், சிபிஎம் கட்சியின் சு.வெங்கடேசன் போன்றவர்களும் தமிழகத்தின் நட்சத்திர பங்கேற்பாளர்களாக மக்களவையில் அதிகம் ஆக்டிவாக தென்பட்டனர்.

ஆ.ராசா - டி.ஆர்.பாலு
ஆ.ராசா - டி.ஆர்.பாலு

தென்சென்னை தொகுதியின் திமுக எம்பி சுமதி தமிழச்சி தங்கபாண்டியன் 55 விவாதங்களில் பங்கேற்று 247 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கோவை சிபிஎம் எம்பியான பி.ஆர்.நடராஜன் 51 விவாதங்களில் பங்கேற்று 213 கேள்விகளை முன்வைத்துள்ளார். திமுக ஈரோடு எம்பியான ஏ.கணேசமூர்த்தி 26 விவாதங்களில் பங்கேற்று 227 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கரூர் காங்கிரஸ் எம்பியான ஜோதிமணி 38 விவாதங்களில் பங்கேற்று 163 கேள்விகளை எழுப்பியுள்ளார். நாகப்பட்டினம் சிபிஐ எம்பி எம்.செல்வராஜ் 55 விவாதங்களில் பங்கேற்று 209 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அரக்கோணம் திமுக எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன் 15 விவாதங்களில் பங்கேற்று 225 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தர்மபுரி திமுக எம்பியான எஸ்.செந்தில்குமார்267 விவாதங்களில் பங்கேற்று 435 கேள்விகளால் நாடாளுமன்றத்தை திரும்பி பார்க்கச் செய்திருக்கிறார். இந்த வகையில் தமிழக எம்பிக்களில் இவரே முதன்மை பெறுகிறார். காஞ்சிபுரம் திமுக எம்பி-யான ஜி.செல்வம் 17 விவாதங்களில் பங்கேற்று 363 கேள்விகளை எழுப்பியுள்ளார். மதுரை சிபிஎம் எம்பியான சு.வெங்கடேசன், 28 விவாதங்களில் பங்கேற்று 218 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். நீலகிரி தொகுதியின் திமுக எம்பியான ஆ.ராசா 38 விவாதங்களில் பங்கேற்று 229 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். சேலம் திமுக எம்பியான எஸ்.ஆர்.பார்த்திபன் 38 விவாதங்களில் பங்கேற்றதோடு 240 கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

தர்மபுரி எம்பி செந்தில் குமார்
தர்மபுரி எம்பி செந்தில் குமார்

திருச்சி காங்கிரஸ் எம்பியான சு.திருநாவுக்கரசர் 31 விவாதங்களில் பங்கேற்று 313 வினாக்களை எழுப்பியிருக்கிறார். காஞ்சிபுரம் திமுக எம்பியான ஜி.செல்வம் 363 கேள்விகளை மக்களவையில் எழுப்பியபோதும் 17 விவாதங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் திமுக எம்பியான டி.ஆர்.பாலு 51 விவாதங்களில் பங்கேற்று 192 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கோவை சிபிஎம் எம்பியான பி.ஆர்.நடராஜன் 51 விவாதங்களில் பங்கேற்று 213 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். ஈரோடு திமுக எம்பி ஏ.கணேசமூர்த்தி 26 விவாதங்களில் மட்டுமே பங்கேற்றபோதும் 227 கேள்விகளை கேட்டிருக்கிறார்.

கரூர் காங்கிரஸ் எம்பியான எஸ்.ஜோதிமணி 38 விவாதங்களில் பங்கேற்று 163 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். பொள்ளாச்சி திமுக எம்பியான கே.சண்முகசுந்தரம் 19 விவாதங்களில் பங்கேற்று 197 கேள்விகளை முன்வைத்திருக்கிறார். வேலூர் திமுக எம்பியான டி.எம்.கதிர் ஆனந்த் 26 விவாதங்களில் பங்கேற்று 218 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். பெரம்பலூர் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற டி.ஆர்.பாரிவேந்தர் 33 விவாதங்களில் பங்கேற்று 213 கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

அதிமுகவின் ஒரே எம்பியாக மக்களவை சென்ற் தேனி எம்பி பி.ரவீந்திரநாத் குமார் 97 விவாதங்களில் பங்கேற்றதுடன் 173 கேள்விகளை முன்வைத்துள்ளார். திருநெல்வேலி திமுக எம்பியான எஸ்.ஞானதிரவியம் 21 விவாதங்களில் பங்கேற்று 204 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். விருதுநகர் காங்கிரஸ் எம்பியான மாணிக்க தாகூர் 86 விவாதங்களில் பங்கேற்று 276 வினாக்களை எழுப்பி இருக்கிறார். ஆரணி காங்கிரஸ் எம்பியான எம்.கே.விஷ்ணு பிரசாத், 28 விவாதங்களில் மட்டுமே பங்கேற்றபோதும் 210 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். சென்னை வடக்கு திமுக எம்பியான வி.கலாநிதி 54 விவாதங்களில் பங்கேற்று 250 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கள்ளக்குறிச்சி திமுக எம்பியான பொன்.கௌதம் சிகாமணி 46 விவாதங்களில் பங்கேற்று 331 கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

ராமநாதபுரம் இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் எம்பியான கே. நவாஸ்கனி 126 விவாதங்களில் பங்கேற்று 241 கேள்விகளை எழுப்பியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தென்காசி திமுக எம்பியான தனுஷ் எம்.குமார் 119 விவாதங்களில் பங்கேற்று 421 கேள்விகளை முன்வைத்துள்ளார். இவர்கள் இருவரும் விவாதங்களில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையில், தர்மபுரி எம்பி செந்தில்குமாருக்கு அடுத்தபடியாக முதன்மை பெற்றுள்ளனர். தூத்துக்குடி திமுக எம்பியும் தமிழகத்தின் நட்சத்திர முகங்களில் ஒருவருமான கனிமொழி கருணாநிதி 62 விவாதங்களில் பங்கேற்று 154 கேள்விகளை எழுப்பியுள்ளார். திருவண்ணாமலை திமுக எம்பியான சி.என்.அண்ணாதுரை 47 விவாதங்களில் பங்கேற்று 373 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ரவிகுமாருடன் தொல்.திருமாவளவன்
நாடாளுமன்ற வளாகத்தில் ரவிகுமாருடன் தொல்.திருமாவளவன்

விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன், 61 விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். ஆனால் ஒப்பீட்டளவில் 125 வினாக்களை மட்டுமே எழுப்பியுள்ளார். இவரைப் போன்றே விசிக எம்பியான டி.ரவிகுமார் விழுப்புரம் தொகுதியில் திமுக சின்னத்தில் நின்று வென்றவர், மக்களவையில் 55 விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார்; கேள்விகளை எழுப்பியதில் 176 என்ற எண்ணிக்கையை பெற்றுள்ளார்.

இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மக்களவை செயல்பாடுகளில் பின்தங்கியவராக தென்படுகிறார் தஞ்சாவூர் திமுக எம்பியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். இவர் 5 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். ஆனால் 5 ஆண்டுகளில் கேள்விகள் எதையும் எழுப்பவில்லை. கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பியான விஜய் வசந்த் 18 விவாதங்களில் பங்கேற்று 156 கேள்விகளை எழுப்பியுள்ளார். சென்னை மத்திய தொகுதி எம்பியான தயாநிதி மாறன் 18 விவாதங்களில் பங்கேற்று 112 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். வேலூர் திருவள்ளூர் காங்கிரஸ் எம்பியான கே.ஜெயகுமார் 28 விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார்; 20 கேள்விகளை மட்டுமே எழுப்பியிருக்கிறார்.

திண்டுக்கல் திமுக எம்பியான பி.வேலுசாமி 15 விவாதங்களில் பங்கேற்று 173 கேள்விகளை எழுப்பியிக்கிறார். மயிலாடுதுறை திமுக எம்பியான எஸ்.ராமலிங்கம் 12 விவாதங்களில் பங்கேற்று 125 கேள்விகளை எழுப்பியுள்ளார். சிவகங்கை காங்கிரஸ் எம்பியான கார்த்தி பி.சிதம்பரம் 19 விவாதங்களில் பங்கேற்று 131 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கடலூர் திமுக எம்பியான டி.ஆர்.வி.எஸ் ரமேஷ் 5 விவாதங்களில் மட்டுமே பங்கேற்றபோது, 142 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பியான ஏ.செல்லக்குமார் 24 விவாதங்களில் பங்கேற்று148 கேள்விகளை எழுப்பி இருக்கிறார். நாமக்கல் திமுக எம்பியான ஏ.கே.பி சின்ராஜ் 12 விவாதங்களில் பங்கேற்றபோதும் 235 கேள்விகளை எழுப்பியுள்ளார். திருப்பூர் சிபிஐ எம்பி கே.சுப்பராயன் 28 விவாதங்களில் பங்கேற்றபோதும் 20 கேள்விகளை மட்டுமே எழுப்பியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in