பசவராஜ் பொம்மை செய்வது தான் சட்டவிரோதம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

"உச்சநீதிமன்றத்திற்கு எதிராக, மேம்பாட்டு ஆணைய விதிகளுக்கு எதிராக மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் செயல் தான் சட்டவிரோதம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. அத்துடன் அணை கட்டுவதற்கான தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கர்நாடக அரசின் செயலைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தின.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் தனித் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு எந்தவித சுற்றுச்சூழல் அனுமதியும் அளிக்கக்கூடாது என அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், "மேகேதாட்டு திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதமான முடிவு" என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "மேகேதாட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் மேகேதாட்டு திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் குற்றச்சாட்டு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, "யார் செய்வது சட்டவிரோதம்? உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்படாமல், மேம்பாட்டு ஆணைய விதிகளுக்கு எதிராக மேகேதாட்டுவில் அணையை கட்டும் கர்நாடக அரசின் செயல்தான் சட்டவிரோதம். முதல்வர் பசவராஜ் பொம்மை செய்வது தான் சட்டவிரோதம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in