ஜாமீன் மனு தள்ளுபடி... உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி உடனே மேல்முறையீடு!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8வது முறையாக நீட்டிக்கப்பட்டு, அக்டோபர் 20 வரை சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இரண்டு முறை ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் (அக்டோபர் 16ல்) விசாரித்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பில், மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கேட்க முடியாது என்றும், அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாகியுள்ளதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றும், சோதனைக்கு சென்று அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பான கடந்த சம்பவங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறி, செந்தில்பாலாஜியின் ஜாமீன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மேல்முறையீட்டு மனுவை நாளை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in