கனல் கண்ணனுக்கு கிடைத்தது ஜாமீன்: கடும் நிபந்தனைகளை விதித்தது உயர் நீதிமன்றம்!

கனல் கண்ணனுக்கு கிடைத்தது ஜாமீன்: கடும் நிபந்தனைகளை விதித்தது உயர் நீதிமன்றம்!

பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலைப்பண்பாட்டு பிரிவின் செயலாளரும், திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 'ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்' எனப் பேசினார். இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் குமரன் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார், கனல் கண்ணன் மீது கலகம் செய்யத் தூண்டிவிடுதல், அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் ஆகஸ்டு 15-ம் தேதி புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கனல் கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கனல் கண்ணன் ஒரு கட்சியில் இருக்கும் போது மாற்றுக் கருத்து கொண்டவர்களைக் குறித்து ஏன் பேச வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி முன் 4 வாரங்களுக்கு இரு வேளையும் ஆஜராகிக் கையெடுத்திட வேண்டும் என நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in