முடிவுக்கு வந்த 20 ஆண்டு அரசியல் சகாப்தம்: சறுக்கிய சுரேஷ்ராஜன்

மாவட்டச் செயலாளர் நீக்கத்தின் பிண்ணனி என்ன?
சுரேஷ்ராஜன்
சுரேஷ்ராஜன்

இருபது ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்ட திமுக செயலாளர், 33 வயதில் திமுக அமைச்சரவையில் இடம்பெற்றவர், பத்தாண்டுகள் அமைச்சராக இருந்தவர் என்னும் அடையாளத்தை எல்லாம் தாண்டி, குமரி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலினின் நிழல் என வர்ணிக்கப்பட்ட சுரேஷ்ராஜனை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விடுவித்துள்ளது திமுக. அதன் பிண்ணனியை அலசுகின்றது இந்தச் செய்தித் தொகுப்பு.

மனைவியுடன் சுரேஷ்ராஜன்
மனைவியுடன் சுரேஷ்ராஜன்

திமுக இளைஞர் அணியில் இருந்து அரசியல் களத்திற்கு வந்தவர் சுரேஷ்ராஜன். சொந்தமாக பைனான்ஸ் தொழில் செய்து வந்தவர், திராவிடக் கொள்கைகளின் மீது கொண்ட ஈர்ப்பால் திமுகவில் வேகம் காட்டினார். ஒருகட்டத்தில் இளைஞரான அவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினின் குட்புக்கிலும் இடம்பிடித்தார். 1996 ஆம் ஆண்டு கன்னியாகுமரி தொகுதியில் வென்றவர், சுற்றுலாத்துறை அமைச்சரும் ஆனார். அப்போது அவருக்கு வெறும் 33 வயது. 2006 ஆம் ஆண்டு சுற்றுலா மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இருபது ஆண்டுகளாக திமுகவின் மாவட்டச் செயலாளராக இருந்த சுரேஷ்ராஜன், மதுரையை மையமாகக் கொண்டு அழகிரியின் கரம் ஓங்கிய காலத்தில் மு.க.ஸ்டாலினின் பக்கம் நின்றார். இதனால் மு.க.ஸ்டாலினின் ப்ரியமான மாவட்டச் செயலாளர்கள் பட்டியலிலும் இடம்பிடி த்தார். இவர் மீது சொத்துக்குவிப்பும் வழக்கு நிலுவையிலும் நிலுவையில் உள்ளது.

இதேபோல் சுரேஷ்ராஜனின் மனைவி பாரதியும், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவும் நெருங்கிய தோழிகள். மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வரும்போதெல்லாம் உடன்வரும் துர்கா ஸ்டாலின், பாரதியோடு ஆன்மிக யாத்திரைகள் செய்வது வழக்கம். இந்த அளவுக்கு தலைமையோடு நெருக்கமாக இருந்த சுரேஷ்ராஜனுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் வினோத சிக்கலைக் கொடுத்தது.

மகேஷ் (திமுக)
மகேஷ் (திமுக)

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றிருந்தால் மூன்றாவது முறையாக அமைச்சராகி இருக்க வேண்டியவர் சுரேஷ்ராஜன். ஆனால் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தியிடம் தோற்றார். நாகர்கோவிலில் சுரேஷ்ராஜன் தோற்றதால் பத்மநாபபுரத்தில் வென்ற மனோதங்கராஜ் அமைச்சர் ஆனார். ஏற்கனவே கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜனுக்கும், மேற்கு மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ்க்கும் ஏழாம் பொருத்தம். மனோ அமைச்சரும் ஆகிவிட சுரேஷ்ராஜனின் அதிதீவிர ஆதரவாளராக இருந்த வழக்கறிஞர் மகேஷ், மனோதங்கராஜ் நிழலில் ஒதுங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் என மனோதங்கராஜ் வலம்வந்தாலும் கிழக்கு மாவட்டத்தில் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் சுரேஷ்ராஜன். ஆனால் நாகர்கோவில் மாநகரச் செயலாளர் மகேஷ் உள்ளிட்ட சிலர், மனோதங்கராஜ் பின்னால் சென்றதும் ரொம்பவே பதட்டத்திற்கு உள்ளாகிவிட்டார் சுரேஷ்ராஜன்.

இருபது ஆண்டுகளாக குமரிமாவட்ட திமுகவில் முக்கியப்புள்ளியாக வலம்வந்த தன் அரசியல் வாழ்வு தன் கண்முன்பே கேள்விக்குரியாவதை யூகித்தார் சுரேஷ்ராஜன். ஆனாலும் மனதுக்குள் புலம்புவதைத் தாண்டி அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. மனோதங்கராஜ் ஆசியோடு, மாநகரச் செயலாளர் மகேஷ் மேயர் வேட்பாளரும் ஆனார்.நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக 24, காங்கிரஸ் 7, மதிமுக ஒன்று என திமுக கூட்டணிக்கே 32 வாக்குகள் இருந்தன. ஆனால் மேயர் தேர்தலில் மகேஷ் 28 வாக்குகளையே பெற்றார். துணை மேயர் தேர்தலில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து நின்ற போட்டி வேட்பாளர் ராமகிருஷ்ணன் 24 வாக்குகளைப் பெற்றார். திமுகவின் அதிகாரப்பூர்வ மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருந்தாலும்கூட கூட்டணி வாக்குகளே சிதறிப் போனது சர்ச்சையானது. அதேபோல் கட்சி அறிவித்த துணை மேயர் வேட்பாளரை மீறி போட்டி வேட்பாளர் களம் இறங்கியதும் குமரிமாவட்ட திமுகவின் பின்னடைவு எனவும் தலைமை யோசித்திருக்கிறது.

சுரேஷ்ராஜன்
சுரேஷ்ராஜன்

இதேபோல் சுரேஷ்ராஜனின் ஆளுகையில் இருந்த கிழக்கு மாவட்ட திமுகவுக்குள் வரும் குளச்சல் நகர சபையில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஜாண்சன் சார்லஸை, திமுக போட்டி வேட்பாளர் நசீர் தோற்கடித்தார். இதையெல்லாம் கூட்டிக்கழித்துத்தான் தலைமையின் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் இதற்குள் இன்னொரு அரசியல் கணக்கும் இருக்கிறது.

கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்கள் பலரையும் திமுகவினர் போட்டியாகக் களம் இறங்கி ஆங்காங்கே வீழ்த்திய சம்பவங்கள் அரங்கேறியது. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போராட்டத்திலும் இறங்கின. ஒருகட்டத்தில் தொல் திருமாவளவன், கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் வென்ற திமுகவினர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலினோ தான் நெக்குருகி நிற்பதாக வேதனையாகச் சொல்லி திருமாவின் வார்த்தைகளையே முன்மொழிந்தார். பூவிருந்தமல்லி நகர திமுக செயலாளர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக தடாலடியாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் கட்சியினருக்கு தன் வலிமையைக் காட்ட சில அரசியல் அதிரடிகளை நிகழ்த்த வேண்டிய கட்டாயம் திமுக தலைமைக்கும் உருவானது. அதேவேளையில் நாகர்கோவில் மாநகராட்சியில் கூட்டணி வாக்குகள் குறைந்து போனது, துணை மேயர் தேர்தலில் போட்டி வேட்பாளர் களம் இறங்கியது, குளச்சல் நகரசபையில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து நின்ற போட்டி வேட்பாளர் வென்றது ஆகியவை சுரேஷ்ராஜன் நீக்கத்திற்கு காரணமானது. ஒருவகையில் இன்னும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்று, இளைப்பாறும் அனைவருக்குமான எச்சரிக்கையாக தனக்கு நெருக்கமானவரையே நீக்கிய அச்சத்தை விதைக்கிறார் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள்.

சுரேஷ்ராஜன் நிழலில் அரசியல் செய்துவந்த மாநகரச் செயலாளர் மகேஷ், மேயர் ஆன கையோடு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் களேபரங்களினால் குமரியின் இருபதாண்டு அரசியல் சகாப்தம் சுரேஷ்ராஜனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மகேஷ்க்கு கைகொடுத்த அதிமுக?

நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக கூட்டணி வாக்குகள் 32 இருந்த நிலையில் 28 வாக்குகள் மகேஷ்க்கு கிடைத்தது. இதில் 4 வாக்குகள் பாஜக அணிக்கு சென்றது குறித்தே விவாதங்கள் நடக்கிறது. ஆனால் அதிமுக சார்பில் வென்றிருந்த 7 பேரில் இருவர் திமுகவுக்கு வாக்களித்திருப்பதாக இருதரப்பிலும் தகவல்கள் அலையடிக்கிறது. ஒருவேளை அதிமுகவின் அவ்விரு வாக்குகளும் பாஜக பக்கமே சாய்ந்திருந்தால் குலுக்கல் முறையில் மேயர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் சூழலும் நிகழ்ந்திருக்கும் என்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in