இறங்கி வந்த அண்ணாமலை... எகிறிக் கொண்ட ஈபிஎஸ்!

இறங்கி வந்த அண்ணாமலை... எகிறிக் கொண்ட ஈபிஎஸ்!
Updated on
4 min read

தான் தொடங்கவிருக்கும் ‘என் மண், என் மக்கள் யாத்திரை’யின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை என்னதான் நாம் வளர்ந்து வந்தாலும் தற்போதைய நிலையில்  நமக்கு அதிமுகதான் முக்கியம்  என்று அண்ணாமலைக்கு பாஜக மேலிடம்  அழுத்திச் சொல்லியிருப்பதன் விளைவுதான் இந்த அழைப்புக்குக் காரணம் என்கிறார்கள். ஆனால், அண்ணாமலையின் அழைப்பை நிராகரித்திருப்பதன் மூலம் தனது கெத்தைக் காட்டி இருக்கிறார் ஈபிஎஸ்!

அண்ணாமலை
அண்ணாமலை

அண்ணாமலையின் இந்த அழைப்பை கூட்டணிக்கட்சி தலைவருக்கான அழைப்பு என்பதாக மட்டும் பார்க்கமுடியாது. பலவித சமரசங்களும் அதன் பின்னால் இருப்பதையும் உற்றுக் கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், சமரசத்துக்கே இடமில்லை என்று களமாடிவர் அண்ணாமலை. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகதான் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது, தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்ற முன்முடிவுகளோடு அதனை நோக்கிய பயணத்தை அண்ணாமலை தமிழ்நாட்டில் தொடங்கியிருந்தார். அதற்கான வலிவை, அடித்தளத்தை கட்டமைக்கும் முயற்சியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். 

குறிப்பாக, அதிமுக இல்லாமல் தங்கள் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அண்ணாமலை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இதையே தங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் வெளிப்படையாக பேசியவர், ”என்னுடைய நிலைப்பாடு இதுதான். இதற்கு மேலிடத் தலைவர்கள் யாரும் சம்மதிக்கவில்லை என்றால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப்போய்விடுவேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார். அவரின் இந்த நிலைப்பாட்டுக்கு மேலிடமும் எதிர் ரியாக்‌ஷன் காட்டாமல் இருந்தது. அதனால் அப்போது நடந்த வாதப் பிரதிவாதங்களின்போதும், “என் முடிவு அதுதான்; அதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றே அண்ணாமலை சொன்னார்.   

அப்போது அண்ணாமலைக்கு ஆதரவாக இருந்த பாஜக மேலிடத் தலைவர்கள் இப்போது அண்ணாமலையின் அதிமுக இல்லாத கூட்டணி என்ற கருத்திற்கு முரண்பட்டு நிற்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி அமைவதற்கு முன்புவரை அண்ணாமலையை விட்டுப்பிடித்த பாஜக,  தற்போது இந்த பேச்சை ரசிக்கவோ நீட்டிக்கவோ விரும்பவில்லை.  ஏனென்றால் தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக கூட்டணி மிக வலுவாக இருக்கிறது. அதிமுகவோ இரண்டாக மூன்றாக உடைந்து கிடக்கிறது.  பாஜக தனியாக நின்றால் சொந்தமாக ஒரு தொகுதியில் கூட வெல்வது சிரமம்.

அதேசமயம், ஆளும் மத்திய பாஜகவுக்கு எதிராக அகில இந்த அளவில் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து விட்டன. இந்த நிலையில், தங்களோடு இருந்த கட்சிகளையும் உதறிவிட்டு தனித்த தெம்பிலிருந்த பாஜக, தற்போது உதறல் எடுத்து ஒவ்வொரு கட்சியாக தேடி அரவணைத்து வருகிறது. அப்படித்தான் 38 கட்சிகளை தன்னுடைய கூட்டணியில் இணைத்திருக்கிறது. இத்தனைக் கட்சிகள் இருந்தாலும் பாஜக, அதிமுக தவிர்த்த அவற்றின் ஒட்டுமொத்த வலு,   ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகளின் வலுவிற்குக்கூட ஈடானதாக இருக்காது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.  

ஆக, எதிர்க்கூட்டணி பலமாக அமைந்துவிட்டதால் பதறும் பாஜக, இந்தியா முழுமைக்குமே தங்களுடைய கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறது. வட மாநிலங்களில் கடந்த தேர்தலைவிட இம்முறை குறைவான இடங்களே பாஜகவுக்குக் கிடைக்கும் என்று சொல்லப்படும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து தங்கள் கூட்டணிக்கு குறிப்பிட்ட இடங்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறது பாஜக.   

அண்ணாமலையின் விருப்பத்துக்கு விட்டால்  தாங்கள் விரும்பும் அத்தகைய முடிவை எதிர்பார்க்க முடியாது என்பதால் அதிமுகவை விமர்சிக்க வேண்டாம், ஈபிஎஸ் தரப்புடன் மோதல் போக்கு வேண்டாம் என்று அண்ணாமலைக்கு அட்வைஸ் கொடுத்தது பாஜக தலைமை. இன்னொரு பக்கம், அண்ணாமலையையும் ஈபிஎஸ்ஸையும் சமாதானப்படுத்தும் வேலைகளையும் கையில் எடுத்தது பாஜக.

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

என்றாலும் பிடிகொடுக்காமலேயே இருந்த ஈபிஎஸ். அண்மையில் அமித் ஷா சென்னை வந்த போது கால் வலியைக் காரணம் காட்டி அவரைச் சந்திக்க மறுத்தார். அவரின் கோபத்தை புரிந்து கொண்ட பாஜக, அவருக்கு விமான நிலையங்களில் விமானம் வரை காரில் செல்லும் சலுகையை அளித்தது. அடுத்ததாக, அவரை அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்ததை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. 

ஈபிஎஸ் சமாதானப்படலத்தின் உச்சகட்டம் டெல்லியில் நடந்தது. டெல்லியில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்கு வந்த பிரதமரை வரவேற்கும் பொறுப்பு பாஜக தலைவர் நட்டாவோடு ஈபிஎஸ்ஸுக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் மோடிக்கு இணையாக அவருக்கு பக்கத்தில் முன்வரிசையில் அமரவைக்கப்பட்டார் ஈபிஎஸ்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் பாஜக தலைமையின் எண்ணத்தை உணர்ந்து கொண்டுவிட்ட அண்ணாமலையும் இறங்கி வரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார். தன் மீதான கோபம் ஈபிஎஸ்ஸுக்கு இருக்கும் என்பதால் தான் மட்டும் செல்லாமல்  மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, கரு.நாகராஜன் உள்ளிட்டோருடன் ஈபிஎஸ்ஸின் வீட்டுக்கே சென்று யாத்திரை தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தார் அண்ணாமலை. 

இப்படி ஈபிஎஸ்ஸை வீடு தேடிப் போய் அழைத்த அண்ணாமலை, இன்னொரு பக்கம் ஓபிஎஸ்ஸையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி போனில் அழைத்தார். இது தான் இப்போது ஈபிஎஸ் வட்டாரத்தை துணுக்குறச் செய்திருக்கிறது. பாஜக கூட்டணியில் இருக்கும் தன்னை அழைத்ததோடு நில்லாமல் தங்களின் வேண்டா விருந்தாளியான ஓபிஎஸ்ஸை எதற்காக அண்ணாமலை அழைத்திருக்கிறார்? இவர்களின் திட்டம் தான் என்ன? ஏன் இப்படி தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளி விடுகிறார்கள்? தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஓபிஎஸ், தினகரன், சசிகலா என தாங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் அத்தனை பேரையும் உள்ளே கொண்டு வந்து தங்களை சங்கடப்படுத்த திட்டம் போடுகிறதா பாஜக? அதற்கான வெள்ளோட்டமாகத்தான் அண்ணாமலை மூலம் ஓபிஎஸ்ஸை அழைத்துப் பார்க்கிறார்களா என்றெல்லாம் ஆலோசனை நடத்தி இருக்கிறது ஈபிஎஸ் தரப்பு.

அண்ணாமலை அழைப்பை ஏற்று ஓபிஎஸ் கட்டாயம் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார். அப்படி அவர் கலந்துகொண்டால் அந்த நிகழ்வில் நாமும் கலந்துகொள்வது தேவையற்ற சங்கடங்களையும் சர்ச்சைகளையும் உண்டாக்கும் என்பதாலேயே அண்ணாமலையின் அழைப்பை நிராகரித்திருக்கிறார் ஈபிஎஸ்.

இந்த நிலையில், அண்ணாமலையின் மனமாற்றம் மற்றும் பாஜக தலைமையின் நிலைப்பாடு குறித்து பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ராம. சீனிவாசனிடம் பேசினோம். ”தென்னிந்தியாவில் எங்கள் கூட்டணியில் இருக்கிற மிகப்பெரிய கட்சி அதிமுக. அதுமட்டுமில்லாமல் எங்கள் நீண்டகால கூட்டணித் தோழனாகவும் அது இருக்கிறது.  எனவே, அதற்கான உரிய முக்கியத்துவத்தை எங்கள் டெல்லி தலைமை கொடுத்திருக்கிறது. தற்போது மாநில தலைவரும் அளித்திருக்கிறார். 

வாய்ப்பிருக்கும் பட்சத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது எங்கள் மாநில தலைவரின் விருப்பமாக இருந்தது.  அதில் ஒன்றும் தவறில்லை. அது அதிமுகவை உள்ளடக்கிய பாஜக கூட்டணி என்று அவர் சொல்லவில்லை. 2014-ல் பாஜக தலைமையில் அமைத்ததுபோல், உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் தனித்து களமிறங்கியது போல அனைத்து  வாய்ப்புகளையும்  பாஜக பரிசீலிக்கும். அதுபோன்ற வாய்ப்புக்கள் குறித்து அண்ணாமலை முயற்சித்தார்.

ராம.சீனிவாசன்
ராம.சீனிவாசன்

அதேசமயம், தனது விருப்பங்களை எல்லாம் சொல்லி இருந்தாலும் ‘கூட்டணி குறித்து மேலிடத் தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள்’ என்று அப்போதே மாநிலத் தலைவர் கூறியிருந்தார். அதன்படி தற்போது தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி மேலும் உறுதியாகியிருக்கிறது. இதில் மேலும் சில  கட்சிகள் சேரலாம். அதனால் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும். அடுத்த ஆட்சியும் எங்களுடையதாகத்தான் இருக்கும்” என்றார் அவர்.                

ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க வேண்டும், கைப்பற்ற வேண்டும் என்றால் பாஜக எதையும் செய்யத் தயங்காது என்பது நிகழ்காலத்தில் நாம் பார்க்கும் நிஜம். அந்த வகையில், இங்கே அதிமுகவை விட்டால் தங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் இறங்கி வர ஆரம்பித்திருக்கிறது பாஜக. ஆனாலும் பிடிகொடுக்காமல் நழுவுகிறார் ஈபிஎஸ். இந்த நழுவலின் பின்னணியில் பல அரசியல் கணக்குகளும் உண்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in