
அமைச்சர் உதயநிதி தலையைக் கொய்ய, தாம் அறிவித்த 10 கோடி ரூபாய் தொகையை, 25 கோடி ரூபாயாக உயர்த்துவதாக கூறி அயோத்தி சாமியார் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சனாதனத்தை எதிர்க்கக்கூடாது, கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க வேண்டும்" என பேசினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தக் கருத்து நாடு முழுவதும் எதிரொலித்தது. இதனால் அவருக்கு எதிராக பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார் உதயநிதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் படத்தை கத்தியால் குத்தியும், தீயால் எரித்தும் அவர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மேலும், உதயநிதியின் தலையைக் கொய்தால் 10 கோடி ரூபாய் தரப்படும் என்று அவர் கூறினார். சாமியாரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால், நான் எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன் என்று கூறிய உதயநிதி, தனது கருத்தை திரும்பப்பெற போவதில்லை என்று உறுதிபடக் கூறினார். இந்நிலையில், உதயநிதி மன்னிப்பு கேட்காவிட்டால் அவரால் தப்ப முடியாது என்று அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உதயநிதி தனது வார்த்தைகளை வாபஸ் பெற்றால், நாங்களும் வாபஸ் பெறுவோம், இல்லை என்றால் எங்கிருந்தாலும் தப்ப முடியாது என கூறியுள்ளார். மேலும், ஏற்கெனவே உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்திருந்த நிலையில், 25 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என சாமியார் தெரிவித்துள்ளார்.